ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

ஈஷா மையத்தின் முழுமையான தகவல் – வாசுகி பாஸ்கர் !

ஈஷா மையம் சட்டத்துக்கு புறம்பாக நடப்பது மட்டுமே நாம் ஈஷாவை எதிர்ப்பதற்கு காரணமாக இருக்க கூடாது என்று நான் நினைக்கிறன், அது அரசியல், சட்ட பிரச்சனை, பாரத பிரதமர் மோடியே சிவனை திறந்து வைக்க வருவதால் சட்ட பிரச்சனைகள் வலுவிழந்து போகுமென்பதை குழந்தை கூட கணிக்கும்.
ஜக்கிவாசுதேவ் இந்து மத அடையாளத்தோடு இருப்பதால், வழக்கமான இந்து மதத்திற்கு எதிரான பிரச்சாரமாகவும் நிறைய பேர் நினைக்க கூடும், நாம் எவ்வளவு விளக்கினாலும் அவர்களால் அதை புரிந்து கொள்ள முடியாது, ஆனாலும் நாம் ஒருவரை ஆதரிக்க, எதிர்க்க வலுவான காரணம் இருக்க வேண்டும் என நினைப்பவன் நான்.
“அத்தனைக்கும் ஆசைப்படு” புத்தகம் நண்பர் மூலம் எப்படியோ எனக்கு வந்து சேர்கிறது, ஒரு வித வெறுப்போடு தான் படிக்க ஆரம்பித்தேன், ஆனால் இறை நம்பிக்கை சம்மந்தப்பட்டது என நினைத்திருந்த எனக்கு ஏமாற்றம், ஒவ்வொரு பக்கமும் சுவாரசியமாக நகர ஒரு மூச்சில் அந்த புத்தகத்தை படித்து முடித்தேன், அதை தொடர்ந்து அடுத்தடுத்து புத்தகம் வாங்க ஆரம்பித்தேன், சிடிக்கள் பரவலாக இல்லாத காலத்தில் ஜக்கிவாசுதேவின் வீடியோ தொகுப்புகளை 325 , 250 என செலவு செய்து அவரது உரைகளை கேட்க ஆரம்பித்தேன், ஜக்கிக்கு முழுமையான பின்தொடர்பாளர் ஆனேன்.
சில காலம் பிளசிப்பிகளாக பேச ஆரம்பித்தேன், ஈஷா போனேன், ஒரு கட்டத்தில் அங்கையே Volunteer ஆக சேர்ந்து விடலாமா என்று கூட தோன்றியது உண்டு. இதில் இருந்து மீண்டு வெளியே வர எனக்கு உதவி செய்ததே ஜக்கி தான். சில பல வருடங்கள் அவரின் மொத்த பேச்சுக்களையும் தொடர்ந்து கேட்டு வந்த எனக்கு பல முரண்பாடான கேள்விகள் துளைத்தது, ஜக்கியிடம் அதை கேள்வியாய் வைத்தால் சிரித்து விட்டு சமாளிக்க கூடிய பதிலை வைத்திருப்பார் தெரியும், இருந்தும் எனக்குள்ளே எழுந்த கேள்விகள் என்னை வேறு தளத்துக்கு அழைத்து சென்றது,
புத்தர், ஓஷோ, க்ரிஷ்ணமுர்த்தி, வரலாறு, புவியில், என்று மொத்தமாய் படித்த கலவையை தனக்கே உரித்தான பாணியில் ஜக்கி சாமர்த்தியமாக பேசுவது புலப்பட்டது, நான் மேற்கொண்டு படித்த பல விவகாரங்களின் Replica வாக தான் அவை பெரும்பாலும் இருந்தது. அதுவும் தவறில்லை; குழந்தைக்கு சாதத்தை குழைத்து கொடுப்பதை போல ஒரு குரு கொடுக்கிறார் என்று கூட வைத்துக் கொள்ளலாம், ஆனால் குழந்தை வளர்ப்பில், பருவ வயது குறித்து ஜக்கி முன்னே சொன்னதிற்கு நேர் எதிர்மறையாக அவரது ஆசிரம செயற்பாடுகள் இருப்பதையும், அந்த போதனைகள் Elite சமூகத்துக்கு மட்டுமே பயன்பட்டது என்னை நாளடைவில் நெருட செய்தது.
கண்விழித்து சமூகத்தை கவனிக்க தொடங்கிய நேரம் என்று சொல்லலாம், Ignorance is bliss என்பது அப்பட்டமாய் ஈஷாவின் மைய கருத்து என உள்வாங்கி கொண்ட நேரம் தான், இந்த குறிப்பிட்ட விவகாரம் என்னை யோசிக்க வைத்தது.
ஜக்கிவாசுதேவை விட்டு விலக ஆரம்பித்த நேரம் நான் உணர்ந்த முக்கியமான கேள்வி “அனைத்திற்கும் எப்படி ஒருவன் குருவாக முடியும்? Volunteer என்கிற பெயரில் இளம் பெண்களை, ஆண்களை மொட்டையடித்து தன் கூடவே வைத்துக் கொள்ளும் ஒருவன் எப்படி குருவாக முடியும்?
குரு என்பவன் யார்? அது என்ன அந்தஸ்து? கண்டிப்பாக குரு என்பவனுக்கு மலை கழுகின் குணம் அவசியம், மலை கழுகு தன் குஞ்சிகளை ஒரு கட்டத்தில் மலையில் இருந்து கீழே தள்ளி விடும், குஞ்சிகள் பறந்தே ஆக வேண்டும், தனக்கான உணவை தானே தேட வேண்டும், ஆண்டாண்டு காலமாய் தவமிருந்தாலும் கிடைக்காத அந்த மனநிலையை அந்த கழுகு இயல்பிலேயே வைத்திருக்கிறது, தள்ளி விடும் குஞ்சிகள் பறக்க கற்று வளர்ந்து மீண்டும் தாய் கழுகையே கூட கொத்த நேரிடலாம், அது குறித்து அந்த தாய் கழுகு யோசிக்கவில்லை, குஞ்சிகள் தன்னை போல இந்த உலகத்தை வட்டமிட்டு, தன்னை போலவே சகலத்தையும் அனுபவிக்க வேண்டும் என்கிற பரிசுத்தமான எண்ணம் அந்த கழுகுக்கு உண்டு, ஒரு குருவின் உச்ச ஸ்தானம் இது தான், சிஷ்யனே விரும்பினாலும் ஒரு கட்டத்திற்கு மேல் தன்னை சார்ந்தே தன்னிடம் பயின்றவன் இருந்து விடுவது, குருவின் தோல்வி.
உலகத்தை எதிர்கொள்ள முடியாமல், தன்னை குறுக்கி கொள்கிற ஒருவன் எதை பேசினால் என்ன? பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் மூன்று பிள்ளைகளையும் படிக்க வைத்து, இந்த சமூகத்தின் மொத்த அழுத்தங்களையும் எதிர்கொண்டு வாழ்கிற ஒரு ஏழை அப்பாவிடம் இல்லாத பக்குவமா, ஞானமா, வாழ தெரியாமல் காட்டிற்கு ஓடி மறைபவனிடம் இருக்க போகிறது? தீர்க்க கூடிய இடத்தில் இருப்பவன் வேறு ஒருவனிடம் தீர்வுகளுக்கு ஆலோசனை கேட்பதை விட ஒரு முரண் வாழ்க்கையில் இருக்க முடியுமா?
சிறு வயதில் இருந்து இந்த வயது வரை நமக்கு எத்தனை எத்தனை குருக்கள் நேரடியாகவே, மறைமுகமாகவே நம்மை வழி நடத்தி செல்கிறார்கள், ஒவ்வொரு மனிதரும், ஒவ்வொரு உலக உயிரும் கூட நமக்கு பல நேரங்களில் குருவாக வழி காட்டி கொண்டு தான் இருக்கிறது, “குரு” என்பது நபர் அல்ல, அது ஒரு நிலை, அது எங்கும், எதிலும் கிடைக்கும், ஆனால் மொத்த வாழ்க்கைக்கான எல்லா கேள்விகளுக்கும் என்னிடம் பதில் உண்டு என ஒருவன் சிரித்து கொண்டு காலம் முழுக்க உபதேசங்களை வழங்கி கொண்டு அமர்ந்திருக்கிறான் என்றால் அவன் எவ்வளவு பெரிய மோசடி காரனாய் இருப்பான்? உனக்கு பதில் நான் சிந்திக்கிறேன் என்று ஒருவன் சொன்னால் அது எவ்வளவு அபத்தம்?
காலம் முழுக்க, என்னோடு பணி செய்து கிட என எத்தனையோ வீட்டு பிள்ளைகளை மொட்டையடித்து அடிமை படுத்தி வைத்திருப்பதை, “நாங்கள் அடிமை படுத்த பட வில்லை” என்று அந்த பிள்ளைகளே சொல்வதானால் அது அடிமைத்தனம் இல்லாமல் போய் விடுமா? இயங்குகிறவர்களை நம்மால் அடையாளம் காண்பிக்க முடியும், இயக்குகிறவரை நம்மால் அடையாளம் காண்பிக்க முடியாது, அதை முதலீடாக்கி தான் பலர் இந்த உலகத்தை இயக்கி கொண்டு இருக்கிறார்கள், பாதிக்க படுகிறவர்களும் சேர்ந்து அதற்கு இசைவதால் நம்மால் குற்றத்தை நேரடியாக நிரூபிக்க முடியாது, அப்படியான ஒரு குற்றவியல் மையம் தான் ஈஷா மையம்.
Racing, Flying, Dancing, Singing, என்று அத்தனைக்கும் ஆசைப்படும் ஒரு குரு, Costume, Design, Ambience, Lifestyle என்று அத்தனையும் தன்னை சுற்றி மிக ரசனையாக வடிவமைத்து கொள்ளும் ஒரு குரு, தன்னை தேடி வருபவர்களை மட்டும் மனநோயாளிகளாக உருவாக்குவதை சிந்தியுங்கள்.

எண்ணிக்கையில்லா புத்தகங்களை வாசித்து உங்களை நீங்களே கேள்வி கேட்டு கொண்டு, விடை தேடும் பரந்த சிந்தனையாற்றலை வளர்க்க விடாமல், ஒரே ஒரு புத்தகம் உங்களுக்கு அனைத்தையும் தரும் என்று யாரேனும் பரிந்துரைத்தால் அதை / அவனை ஆய்வுக்கு உட்படுத்துங்கள்.

http://kaalaimalar.net/adiyogi-isha/