ப சிதம்பரம்
சுதந்திரம் என்பது யாராலும் மீற முடியாத மனித உரிமை. மனித உரிமையை மீறும் முயற்சி தான் மனித உரிமைகளை நசுக்கும் தொடக்கம். தனி மனித உரிமையை நசுக்கும் இந்த மசோதா மனித உரிமையின் இதயத்தில் பலமாக கத்தியைப் பாய்ச்சுகிறது.
ஒரு நபரின் தனிப்பட்ட மனித உரிமைக்கு மாறாக நடத்தப் படும் மூன்று விதமான அறிவியல் பூர்வ விசாரணைகள் சரியானது தானா என்று கர்நாடக அரசுக்கு எதிராக செல்வி என்பவர் தொடுத்த வழக்கு விவரங்களை பார்க்கலாம். இந்த வழக்கு கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி நடந்தது. மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த விசாரணையை மேற்கொண்டது.
ஒரு நபரின் விருப்பத்திற்கு எதிராக நடத்தப்பட்ட மூன்று சோதனைகளின் அரசியலமைப்புச் செல்லுபடியை நீதிமன்றம் பரிசீலித்தது. நார்கோ அனாலிசிஸ் எனப்படும் போதைப்பொருள் பகுப்பாய்வு , பாலிகிராப் எனப் படும் பொய் கண்டறியும் சோதனை மற்றும் BEAP எனப்படும் மூளையில் ஏற்படும் மின்னியல் செயல்பாடுகளில் மாறுதல் போன்ற சோதனைகளை தனிநபர் சுதந்திரத்தில் தலையிட வழிவகை செய்யும் சாதனங்களாக உச்சநீதிமன்றம் கருதியது.
நீதிமன்றத்தின் முடிவுகள்
ஒரு தனிநபரின் சுய விருப்பம் இல்லாமல் பேசுவது உண்மையா இல்லையா என்பதை அறிய நடத்தப்படும் சோதனைகள் அனைத்தையும் கட்டாயப்படுத்தி பெறப்படும் ஆதாரங்களாகவே கருதப்பட வேண்டும். அந்தரங்க உரிமையை காக்க அரசமைப்பு சட்டம் அளிக்கும் பிரிவு 20(3)ன் படி நமது பாதுகாப்பு இங்கு பரிசீலிக்கப்பட வேண்டியதாகிறது.
சுய விருப்பம் இல்லாமல் ஒருவரிடம் கட்டாயப்படுத்தி இந்த வகைகளில் பெறப்படும் சாட்சிகள் நமது அந்தரங்க உரிமையை காக்க அரசமைப்பு சட்டம் அளித்துள்ள உரிமையை மீறும் செயல் என்றே நாங்கள் கருதுகிறோம்.
குற்ற வழக்குகளில் உண்மையை கண்டறியவும் ஆதாரங்களை திரட்டவும் எந்த ஒரு தனிநபருக்கு மேலே கூறப்பட்ட எந்த நடைமுறைகளுக்கும் உள்ளாக்கப்படுவது சட்டபூர்வமற்றது என்றும் நாங்கள் நினைக்கிறோம்.
அடுத்ததாக கே.எஸ்.புட்டசாமிக்கும் இந்திய அரசுக்கும் இடையில் நடந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் 9 நீதிபதிகளை கொண்ட அமர்வு விசாரித்தது. அதன்படி
ஒரு தனிப்பட்ட நபரின் வாழ்வில் அல்லது தனிப்பட்ட உரிமையில் குறுக்கிடுவதாக இருந்தால் மூன்று முக்கிய விஷயங்கள் அவசியம் என நீதிமன்றம் கருதுகிறது.
(i) சட்டத்தின் தேவைகளை நிறைவேற்றும் விதமாகவும் சட்டத்தை நிலைநாட்டுவதற்காவும் செய்ய வேண்டியிருத்தல்
(ii) சட்டத்தின் சட்டப்பூர்வமான நோக்கத்தை நிறைவேற்ற அவசியமாக செய்தல்
(iii) தேவைப் பட்டால் சோதனைகளை செய்ய வேண்டிய நோக்கமும் அதன் வழிமுறைகளும் பகுத்தறிவோடு ஏற்கப்படும் விதத்தில் செய்ய அனுமதித்தல்
சுதந்திரமும் தனியுரிமையும்
அரசமைப்புச் சட்டப்படி வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை நீதிமன்றங்கள் வழங்குவதால் அடிப்படை உரிமைகளை விழிப்புடன் காவல் காக்கும் சட்டக் காவலனாக நீதிமன்றங்கள் மதிக்கப்படுகின்றன.
செல்வி மற்றும் கே.எஸ்.புட்டசாமி வழக்குகளின் தீர்ப்புகள் இன்றளவும் நல்ல தீர்ப்புகளாகவே திகழ்கின்றன. தற்போதைய இந்திய அரசாங்கத்தை பொறுத்தவரை. அவர்களுக்கு அப்படி தோன்ற வில்லை. இழிவு படுத்த முடியாத அரசியலமைப்பு உரிமைகள் பிரிவு 20 மற்றும் 21 போன்றவற்றை அரசு உணர்ந்திருந்தால் அரசாங்கம் குற்றவியல் நடைமுறை மசோதா, 2022 ஐ நிறைவேற்றியிருக்காது. இந்த மசோதா வெட்கக்கேடானது மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மீற முயற்சிக்கும் முயற்சி. இது தனி மனித உரிமைகளையும் அந்தரத்தையும் பாதுகாக்கும் உரிமை ஜனநாயகம் நமக்கு தந்த அடிப்படை உரிமையாகும்.
இந்த மசோதாவின் நோக்கம் செட்டப் படி விசாரணைக்கு உட்படும் நபர்களின் விசாரணை எல்லையை விரிவு படுத்தும் முயற்சியே. நவீன நுட்பங்கள் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தொடர்பான உடல் ரீதியான அடையாளங்களை நிரந்தரமாக பதிவு செய்யும் நடவடிக்கையாகவும் அதற்கு சட்ட பூர்வமான அங்கீகாரம் அளிப்பதும் இம் மசோதாவின் நோக்கம். மசோதாவில் பல சட்ட குறைபாடுகள் உள்ளன, ஆனால் சுதந்திரம் மற்றும் தனியுரிமை ஆகிய இரண்டு விலைமதிப்பற்ற உரிமைகளை இந்த மசோதா மீறுகிறது. தனிப்பட்ட உரிமைகள், அந்தரங்கம் என்ற இரு விலை மதிப்பற்ற தன்மைகளை மீறும் நான்கு பிரிவுகளை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
கேள்விக்குரிய பிரிவுகள்
பிரிவு 2: இதில் நடவடிக்கைகள் அல்லது அளவைகள் என்று ஒரு வார்த்தை உள்ளது. இதில் உயிரியல் மாதிரிகள் மற்றும் அவற்றின் பகுப்பாய்வு, நடத்தை பண்புக்கூறுகள் அல்லது பிற தேர்வுகளை நடவடிக்கை என்ற ஒரு வார்த்தையில் அடங்கும் படி செய்திருக்கிறார்கள். இவை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் Ss. 53, 53 A மற்றும் 54 இல் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் விதிவிலக்குகள் இல்லை.
கேள்வி: அளவீடுகளில் போதைப்பொருள் பகுப்பாய்வு, உண்மை கண்டறியும் பாலிகிராப் சோதனை, BEAP மற்றும் மனநல பரிசோதனைகள் அடங்கியுள்ளனவா?
பிரிவு 3: அளவீடுகள் எந்த நபர்களிடம் இருந்தும் பெறப்படும். எந்தச் சட்டத்தின் கீழும் தண்டிக்கப்படும் குற்றத்திற்காக தண்டனை பெற்றவரிடமும் , அமைதி காக்கப் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டவரிடமும் , எந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டோரிடமும், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒருவரிடமும் அளவீடுகள் அல்லது நடவடிக்கைகள் பெறப்படலாம். எந்த சட்டத்தில் கைது செய்யப் பட்டவரிடமும் இப்பிரிவின் கீழ் அனைத்து அடையாளங்களையும் திரட்ட இந்த மசோதா வழிவகை செய்கிறது. S. 144, CrPC பிரகடனப்படுத்தப்பட்ட இடத்தில் போலீஸ் தடையை கடக்க முயற்சிக்கும் எந்தவொரு எதிர்ப்பாளறையும் இந்த மசோதாவால் அடையாள படுத்த முடியும்.
கேள்விகள்: எம்.பி., எம்.எல்.ஏ., அரசியல்வாதி , தொழிற்சங்கவாதி, மாணவர் தலைவர், சமூக ஆர்வலர், முற்போக்கு எழுத்தாளர் அல்லது கவிஞர் என யாரேனும் இதுவரை இச்சட்டத்தில் கைது செய்யப்படா விட்டாலும் எதிர் காலத்தில் கைது செய்யப்பட மாட்டார்கள் என உத்தரவாதம் அளிக்க முடியுமா? நான் கூட இளைஞர் காங்கிரசில் இணைந்த அன்று, சென்னை மின்டோ சிலை அருகே ஆர்ப்பாட்டம் செய்த பொது இதர தொடர்களுடன் கைது செய்யப்பட்டேன்.
பிரிவு 4: இந்த மசோதாவின் படி கைதானவர்கள் அளவீடுகள் சேமிக்கப்பட்டு, 75 ஆண்டுகளுக்கு பாதுகாக்கப்பட்டு ஆவணப் படுத்தப் படும். சட்டத்தை அமலாக்கும் எந்த நிறுவனத்துடனும் பகிரப்படும் என்றில்லை. ஒரு பஞ்சாயத்து அல்லது நகராட்சி அதிகாரி, சுகாதார ஆய்வாளர், போக்குவரத்து காவலர், வரி வசூலிப்பவர் போன்றவர்கள் கூட இந்த அடையாளங்களை தருமாறு கோர முடியும்.
கேள்வி: சட்டத்தை யார் அமலாக்கம் செய்ய முடியும் என்பதற்கு வரையறை இல்லாத நிலையில் இந்த பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட அமலாக்க அதிகாரிகள் யார்?
பிரிவு 5 ஐ பிரிவு S.2 உடன் சேர்த்து படிக்கவும்: ஒரு நபர் தனது அளவீடுகளை கொடுக்க கடமைப்பட்டுள்ளார். ஒரு குற்றவியல் நீதிபதி எந்த ஒரு நபரையும் தனது அளவீடுகளை வழங்குமாறு அறிவுறுத்தலாம் அல்லது உத்தரவிடலாம். அவர் மறுத்தால், ஒரு போலீஸ் அதிகாரிக்கு இந்த உரிமைகள் இந்த மசோதாவால் அளிக்கப்படும். அதற்கு அந்த தனிநபர் மறுத்தால் அவர் S. 186 எனும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்.
கேள்வி: சம்பந்தப்பட்ட நபரின் விருப்பத்திற்கு மாறாகவும் அனுமதியின்றியும் அளவீடுகள் எடுக்கப்படுமா?
மறுக்க முடியாத உரிமை
செல்வி என்பவர் தொடர்ந்த வழக்கில் தடை செய்யப்பட்ட வழிமுறைகள், அதாவது தனி மனித உரிமைக்கு எதிரான தடை செய்யப்பட்ட நுட்பங்களை பயன்படுத்தி உண்மைகள் கண்டறியப் பட மாட்டாது என்று உள்துறை அமைச்சர் வாய்மொழியாக ராஜ்யசபாவில் உறுதியளித்தார், ஆனால் அந்த உறுதிமொழியை மசோதாவில் இணைக்க மறுத்துவிட்டார். இன்னும் மூன்று கேள்விகளுக்கும் பதிலளிக்க மறுத்து விட்டார். அரசு இந்த விவாதங்களுக்கு பதில் அளிக்கையில் வழக்கம் போல பிரதிவாதங்களை முன்வைத்தது. அதன்படி கைதிகளுக்கு மனித உரிமைகள் இருந்தால் அவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மனித உரிமைகள் அளிக்கப் பட வேண்டும் என்று சொல்லப் பட்டது. இந்த மசோதா பாதிக்கபட்டவர்களுக்கு மட்டுமல்ல, கைது செய்யப் பட்டவர்களுக்கும் பொருந்தும் என்று சொல்லப்பட்டது.
இன்னொரு வாதமாக இவ்வளவு கடுமையான சட்டம் ஏனென்று கேட்ட போது குற்ற வழக்குகளில் தண்டனை பெறுபவர் விகிதம் குறைவாக இருப்பதால் தண்டனை கடுமையாக்க படுவதாக பதில் அளிக்கப் பட்டது. ஆனால் குறைந்த தண்டனை விகிதத்திற்கு காரணம் அலட்சிய விசாரணை அதிகாரிகள், மோசமான வழக்கறிஞர்கள், தரமற்ற பதிவுகள் மற்றும் அதிக பணிச் சுமை கொண்ட நீதிபதிகள் என பல காரணங்கள் உள்ளன. கைதிகள், காவலர்கள் மற்றும் கைதிகளின் மனித உரிமைகளை மீறுவதன் மூலம் இந்த நிலைமை மாறாது.
சுதந்திரம் என்பது யாராலும் மீற முடியாத மனித உரிமை. மனித உரிமையை மீறும் முயற்சி தான் மனித உரிமைகளை நசுக்கும் தொடக்கம். தனி மனித உரிமையை நசுக்கும் இந்த மசோதா மனித உரிமையின் இதயத்தில் பலமாக கத்தியைப் பாய்ச்சுகிறது.
தமிழில் : த. வளவன்
source https://tamil.indianexpress.com/opinion/p-chidambaram-writes-dagger-in-the-heart-of-liberty-supreme-court-criminal-procedure-identification-bill-439594/