திங்கள், 6 மார்ச், 2023

வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்: வழக்குப் பதிவு

 5 3 23

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கூறி சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. அச்சுறுத்தல் காரணமாக வடமாநில தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்வதாகவும் தகவல்கள் பரவின. இதையடுத்து அந்த வீடியோ போலியானது என்றும், இது வதந்தி என்றும் தமிழக காவல்துறை விளக்கம் அளித்தது.

முதல்வர் ஸ்டாலின், டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்காகவே தாங்கள் ஊர்களுக்கு செல்வதாக தமிழ்நாட்டில் வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்கள் தெரிவித்தனர். மேலும் போலி வீடியோ தொடர்பாக தமிழகத்தில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தனிப்படை போலீசார் வெவ்வேறு மாநிலங்களுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வடமாநில தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக நேற்று அறிக்கை ஒன்று வெளியிட்டார். அந்த அறிக்கையில் தவறான தகவலை பரப்பும் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக கூறி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அண்ணாமலை மீது கலவரத்தை தூண்டுதல், வதந்தி பரப்புதல், இருபிரிவினருக்கு இடையே மோதலை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அறிக்கையில், தி.முக அமைச்சர்கள், எம்.பிக்கள் வெறுப்பு பிரச்சாரம். இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மேற்கோள் காட்டி குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக தமிழர்கள்- வட இந்தியர்கள் மோதல் அதிகரித்திருப்பது போன்று கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக கூறி வழக்குப் பதியப்பட்டுள்ளது. மேலும் பீகார் பா.ஜ.க ட்விட்டர் கணக்கு மீதும் இதே பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும். அந்த கணக்கில் பதிவிடப்பட்டுள்ள வீடியோக்களை நீக்கவும் ட்விட்டர் நிறுவனத்திற்கு காவல்துறை கடிதம் எழுதியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/migrant-labor-issue-fir-filed-against-bjp-annamalai-604682/