சனி, 25 மார்ச், 2023

ஆன்லைன் ரம்மிக்கு தொழிற்சாலை ஊழியர் பலி: திருச்சியில் சோகம்

 

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வந்த ரவிசங்கர் ஆன்லைன் ரம்மி கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை குடியிருப்பு 8-வது தெருவை சேர்ந்தவர் ரவிசங்கர் (42). இவர் துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனையில் அட்டெண்டராக வேலை பார்த்து வந்தார். ரவிசங்கர் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி பணத்தை இழந்து வந்துள்ளார்.

மேலும் தொடர்ந்து விளையாடி வந்ததில் பெரும் தொகை கடனாக சேர்ந்துள்ளது. 2 நாட்களாக அவர் வேலைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் அதிகப்படியான தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று வழக்கம் போல் காலை ரவிசங்கர் மனைவி ராஜலட்சுமி அவரை எழுப்பிய போது அவர் எழுந்திருக்கவில்லை என்று தெரிகிறது. அதனைத் தொடர்ந்து உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ரவிசங்கரை மீட்டு துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு ரவிசங்கரை பரிசோதித்த மருத்துவர்கள் ரவிசங்கர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ராஜலட்சுமி நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவிசங்கர் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். உயிரிழந்த ரவிசங்கருக்கு சாய்வர்சன் என்ற 6 வயதான மகன் உள்ளார்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி தடை செய்யும் சட்ட மசோதா நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பபட்ட நிலையில் அம் மசோதா திருப்பி அனுப்பபட்டது. மசோதாவை தாக்கல் செய்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ஆன்லைன் சூதாட்டத்தால் 41 பேர் உயிரிழந்துள்ளதாக வேதனை தெரிவித்தார். இந்நிலையில் தற்போது திருச்சியில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி: க.சண்முகவடிவேல்

source https://tamil.indianexpress.com/tamilnadu/trichy-man-ends-life-after-loss-in-online-rummy-619915/