புதன், 22 மார்ச், 2023

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை: தகுதியானவர்கள் யார்?

 21 3 23

தமிழக பட்ஜெட்டில் தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை செப்டம்பர் முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்லதால், உரிமைத் தொகை பெற தகுதியானவர்கள் எப்படி தேர்வு செய்யப்படுவார்கள், யார் தகுதியானவர்கள் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை எப்போது வழங்குவார்கள் என்று குடும்பத் தலைவிகள் இடையே பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. தி.மு.க ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்துவதைப் பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால், எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வந்தன.

இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில், தகுதிவாய்ந்த குடுமபத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். மேலும், இதற்காக பட்ஜெட்டில் ரூ.7,000 கோடி ஒதுக்கியுள்ளதாக அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பெரும் வரவேற்பு பெரிய அளவில் இருந்தாலும், முதலில் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு, இப்போது தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் என்றால் எப்படி என்று எதிர்க்கட்சியினர் விமர்சனங்களை முன்வைத்தனர்.

அதே நேரத்தில், அரசு ஊழியர்கள், வருமானவரி செலுத்துபவர்கள் வரிசையில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை தேவை இருக்காது என்று ஆளும் தி.மு.க தரப்பில் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவதற்கு தகுதிவாய்ந்த குடும்பத்தலைவிகள் எப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டில் மொத்தம் 2.2 கோடி குடும்ப அட்டைகள் இருக்கின்றனர். இந்த குடும்ப அட்டைகள் மொத்த 4 வகையான குடும்ப அட்டைகள் இருக்கிறது. 1. AAY, 2. PHH, 3. NPHH, 4. NPHH-S என 4 வகையான குடும்ப அட்டைகள் உள்ளன.

தமிழ்நாட்டில் அந்தியோதயா அட்டைகள் வைத்திருப்பவர்கள் 18,64,201 குடும்ப அட்டைகள் உள்ளன. இவர்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு மாதம் 35 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.

PHH அட்டை என்கிற முன்னுரிமை குடும்ப அட்டைகளுக்கும் அரிசி வழங்கப்படுகிறது. அதே போல, NPHH என்கிற முன்னுரிமை அல்லாத குடும்ப அட்டைகளுக்கும் அரிசி வழங்கப்படுகிறது. இந்த அரிசி அட்டைகள் மட்டும் 1,98,24, 931 குடும்ப அட்டைகள் இருக்கிறது.

மேலும், NPHHS சர்க்கரை மட்டுமே வழங்கப்படுகிற அட்டைகள் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், கௌரவ அட்டைகள் இருக்கின்றன. இந்த குடும்ப அட்டையை அடையாள அட்டையாக மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதில், AAY, PHH ஆகிய 2 வகை கும்பஅட்டை குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தெரிய வருகிறது.



source https://tamil.indianexpress.com/tamilnadu/who-are-elegible-women-household-to-get-rs-1000-monthly-618003/