செவ்வாய், 28 மார்ச், 2023

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பற்றி கேள்வி கேட்ட திமுக எம்பி: 10 ஆண்டுகளுக்கு முந்தைய புள்ளிவிவரத்தை அளித்த மத்திய அமைச்சர்

 29 3 23

மாநிலங்களவையில், நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களைப் பற்றி திமுக எம்பி கனிமொழி என்.வி.என். சோமு கேட்ட கேள்விக்கு, 10 ஆண்டுகளுக்கு முந்தைய புள்ளி விவரத்தை மத்திய அமைச்சர் பதிலாக அளித்துள்ளார். 

இந்தியாவில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளில் உயர்ந்திருக்கிறதா? அப்படியானால் அதைக் குறைக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்று மாநிலங்களவையில் திமுக எம்பி கனிமொழி என்.வி.என். சோமு கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலளித்த, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை இணையமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங், “வீட்டு உபயோகப் பொருட்களை நுகரும் சக்தியை அடிப்படையாக வைத்து மத்திய புள்ளியியல் துறையின் கீழ் வரும் தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம், ஒரு கணக்கெடுப்பை நடத்துகிறது. அந்தத் தரவுகளின் அடிப்படையில் திட்டக் கமிஷன் (தற்போது நிதி ஆயோக்) வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்தது.

கடைசியாக 2011-12ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி பெறப்பட்ட தரவுகளை, டெண்டுல்கர் கமிட்டியின் முறைப்படி கணக்கிட்டு, இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் விபரங்களை கடந்த 2013ம் ஆண்டு வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் 2011-12 காலகட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை கிராமப் புறங்களில் 21.5 கோடி பேரும்; நகர்ப்புறங்களில் 5.5 கோடி பேரும் என மொத்தம் 27 கோடி பேர் என அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தைப் பொறுத்தவரை 2011-12 காலகட்டத்தில் கிராமப் புறங்களில் 59.2 லட்சம் பேர்; நகர்ப்புறங்களில் 23.4 லட்சம் பேர் என மொத்தம் 82.6 லட்சம் பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளனர்.

அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், பீகார், மணிப்பூர், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், ஒடிசா, உத்தரப் பிரதேசம், ஆகிய இந்திய மாநிலங்களில் சுமார் மூன்றில் ஒருவர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கிறார்கள். கோவா, சிக்கிம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சுமார் ஒரு சதவிகிதம் மற்றும் அதற்கும் குறைவான நபர்களே வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர்.

மத்திய அரசைப் பொறுத்தவரை, அனைவருடன் சேர்ந்து; அனைவருக்குமான வளர்ச்சி’ என்ற முழக்கத்தின் அடிப்படையில் இந்த வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை மனதில்கொண்டே திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. மத்திய அரசும் அதன்கீழ் உள்ள பல்வேறு துறைகளும் நாட்டில் ஏழ்மையை ஒழிக்க பலவிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், திறன் இந்தியா, கரீப் கல்யாண் அன்ன யோஜனா, தேசிய சமூகப் பாதுகாப்புத் திட்டம், தெருவோர வியாபாரிகளுக்கான பிரதம மந்திரியின் திட்டம் என பல்வேறு திட்டங்கள் இந்த அடிப்படையில் உருவானவையே. இவற்றை முழுமையாக, சரியாக அமல்படுத்துவதன் மூலம் நம் நாட்டில் ஏழ்மையை மேலும் குறைக்க முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது” என்று மத்திய இணையமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் பதிலளித்துள்ளார்.


source https://news7tamil.live/dmk-mp-asked-about-people-below-poverty-line-union-minister-gave-statistics-from-10-years-ago.html