29 3 2023
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் போக்குவரத்துத் துறை கொள்கை விளக்க குறிப்பில், ஆதார் அட்டையை பயன்படுத்தி ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு வராமலேயே ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப்பதிவு தொடர்பான 42 சேவைகளை இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் இன்று (மார்ச் 29) தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
போக்குவரத்துத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில், மக்கள் தங்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தி ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு வராமலேயே ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப்பதிவு தொடர்பான 42 சேவைகளை இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதையடுத்து, மகளிர் கட்டணமில்லா பேருந்துகளில் முன் பக்கமும், பின் பக்கமும் மட்டும் பிங்க் நிறம் வணம் பூசப்பட்டதற்கான காரணத்தைக் கூறி விளக்கமளித்துள்ளார். அப்போது, இந்த பேருந்து ஆண், பெண் இருவரும் பயணிக்கும் பேருந்து எனவும் பேருந்து முழுவதும் பிங்க் நிறம் அடித்தால் அது பெண்கள் மட்டும் பயணிக்கும் பேருந்தாகிவிடும் என்று கூறினார்.
மேலும், அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார் போக்குவரத்துத் துறை தனியார் மயமாக்கப்படுமா என்பது குறித்து எழுப்பிய கேள்விக்கு போக்குவரத்து அமைச்சர் சட்டப்பேரவையில் பதில் அளித்தார்
“போக்குவரத்துத் துறையில் தனியார்மயம் கிடையாது. அரசின் வழித்தடத்தில் தனியார் பேருந்து இயக்கப்படுமே தவிர, தனியாருக்கு வழித்தடம் தரப்படவில்லை. உள்ளூர், நகர, கிராம பகுதிகளில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் நாள் ஒன்றுக்கு 1.70 கோடி மக்கள் பயணம் செய்கிறார்கள்.
தமிழ்நாட்டின் பொதுப் போக்குவரத்தை நாட்டில் முதல் இடத்திற்கு கொண்டு வர முயற்சி நடைபெற்று வருகிறது. கட்டணமில்லா பேருந்து மூலம் பெண் பயணிகள் மாதம் ரூ.888 சேமித்துள்ளனர் என போக்குவரத்துத்துறை கொள்கை விளக்கக் குறிப்பு குறிப்பிட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் 7,164 சாதாரண நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய தாழ்தள சிறப்பு பேருந்துகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மின்சார செலவை குறைக்கும் வகையில் போக்குவரத்து கழக வாகனங்களில் சூரிய மின்சக்தி தகடுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்டணமில்லா பேருந்துகள் மூலம் பெண் பயணிகள் பயணம் மேற்கொள்வதன் எண்ணிக்கை 64.65%ஆக உயர்ந்துள்ளது. திருநங்கைகள் 14.66 லட்சம், மாற்றுத்திறனாளிகள் 1.93 கோடி, மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்கள் 10.2 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்” என்று கூறினார்.
அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் வழக்கமாக பயணிக்கும் பயணிகளுக்கு சிறப்பு பயணச் சலுகை வழங்கப்படுகிறது. ஒரு காலண்டர் மாதத்தில் 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்தால், அவர்கள் ஆறாவது பயணம் முதல் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும். இந்த சலுகை அனைத்து அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கும் பொருந்தும்.
அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகளில், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பள்ளி இறுதி தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ – மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும்.
அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். பணிமனைகளில் உள்ள உணவகங்களை நடத்த மகளிர் சுய உதவி குழுக்கள் முன்வந்தால் முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படும். அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பெண்களுக்கென பிரத்யேகமாக இருக்கைகள் ஒதுக்கப்படும் என்று அறிவித்தார்
source https://tamil.indianexpress.com/tamilnadu/minister-ss-sivasankar-govt-transport-department-announcement-tn-assembly-623204/