25 3 23
கொரோனா பரிசோதனையை உடனே அதிகரிக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த 146 நாட்கள் இல்லாத அளவிற்கு தினசரி கொரோனா பாதிப்பு 1590 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 8,601 ஆக உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் பல மாநிலங்களில் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்றும், கொரோனா பாதிப்புள்ளவர்களுக்கு சுவாசப்பிரச்சனை அதிகம் உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை குற்றச்சாட்டியுள்ளது. மருந்துகள், படுக்கை வசதிகள், மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் உள்ளிட்டவை போதிய அளவு கையிருப்பில் வைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரித்துள்ள கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளது. அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்ய மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்றுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தியுள்ளது. இன்ஃபுளுயன்சா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது.
source https://news7tamil.live/corona-testing-should-be-increased-immediately-central-government-instruction-to-states.html