வெள்ளி, 31 மார்ச், 2023

விண்வெளியிலிருந்து இந்தியா பார்க்க எப்படி இருக்கும்? இஸ்ரோ வெளியிட்டுள்ள புதிய செயற்கைக்கோள் படங்கள்

 31 3 23

செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட பூமியின் அற்புதமான படங்களை இஸ்ரோ சமீபத்தில் பகிர்ந்துள்ளதோடு, விண்வெளியிலிருந்து இந்தியா பார்க்க எப்படி இருக்கும்? என்பதை விளக்கும் விதமாக சில அரிய போட்டோக்களையும் இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது.

நவம்பர் 26, 2022 அன்று, பிஎஸ்எல்வி-சி54 திட்டத்தின் ஒரு பகுதியாக ஓஷன்சாட்-3 என்ற நானோ செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. இது வளிமண்டலம் மற்றும் கடல்சார் ஆய்வுக்கு பயன்படுத்தப்படும் இஸ்ரோ செயற்கைக்கோள்களின் தொகுப்பின் ஒரு அங்கமாகும். ஓஷன் சாட்-3 உடன் ஓஷன் கலர் மானிட்டர் (ஓசிஎம்-3), கடல் மேற்பரப்பு வெப்பநிலை மானிட்டர் (எஸ்எஸ்டிஎம்), கு-பேண்ட் ஸ்கேட்டரோமீட்டர் (எஸ்சிஏடி-3) மற்றும் ஆர்கோஸ் ஆகிய மூன்று முக்கிய சென்சார்கள் ஏவப்பட்டன, இது கிரகத்தை பல்வேறு இடங்களில் கண்காணிக்க அனுமதிக்கிறது.

அந்த வகையில், ஓஷன் சாட்-3 மற்றும் ஓஷன் கலர் மானிட்டர் (ஓசிஎம்-3) மூலம் எடுக்கப்பட்ட பூமியின் கண்கவர் புதிய படங்களை செயற்கைக்கோள் சமீபத்தில் அனுப்பியிருந்தது. இதை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) செயற்கைக்கோளில் இருந்து தேசிய தொலை உணர் மையம் (என்ஆர்எஸ்சி) பெற்ற தரவுகளைப் பயன்படுத்தி படங்களை மொசைக்குகளாக உருமாற்றியது. பின்னர் 300 GB தரவைச் செயலாக்கிய பிறகு, ஒவ்வொரு மொசைக்கும் 2,939 படங்களை இணைத்து. ஒவ்வொரு கண்டத்தையும் உள்ளடக்கிய மிக தெளிவான படங்கள், இந்த ஆண்டு பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 15 வரை பூமியில் நடந்த அத்தனை நிகழ்வுகளையும் ஒன்றிணைத்த படமாக தொகுக்கப்பட்டது.


இதில் குறிப்பாக, சுற்றுப்பாதையில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்பட தொகுப்பில் இந்தியா பிரகாசமாகவும் தெளிவாகவும் ஒளிர்வதை சில புகைப்படங்கள் காட்டியுள்ளது. இந்நிலையில், தற்போது இஸ்ரோ, விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களை அதன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த ட்விட் போடப்பட்டதிலிருந்தே புகைப்படங்கள் அனைத்தும் வைரலானதோடு, ​​​​நமது பூமியின், குறிப்பாக நமது இந்தியாவின் மயக்கும் காட்சியைக் கண்டு இணையவாசிகள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா

source https://news7tamil.live/what-would-it-be-like-to-see-india-from-space-new-satellite-images-released-by-isro.html