28 03 2023
எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச் செயலாளர் என்பன உள்ளிட்ட அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓ.பி.எஸ் தரப்பால் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் தீர்ப்பளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் ஆனார். அவருக்கு அ.தி.மு.க தலைவர்களும் தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது சாதுரியத்தால் இந்த இடத்தை அடைந்திருக்கிறார், எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ததில் சங் பரிவார்களின் பின்னணி இருப்பதாக திருமாவளவன் தெரிவித்தார்.
டெல்லியில் மார்ச் 28-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளன் கூறியதாவது: “எடப்பாடி பழனிசாமியை பா.ஜ.க தேர்வு செய்திருக்கிறது; இது அவர்களின் அணுகுறையில் இருந்து தெரியவருகிறது; சட்டப்பூர்வமாக அவர்கள் வென்றிருக்கிறார்கள்; நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்றிருக்கிறார்கள் என்கிற தோற்றம் உருவாக்கப்பட்டாலும், பாரதிய ஜனதா, சங்பரிவார்களின் ஆதரவும் பின்னணியும் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வமான பொதுச் செயலாளராக செயல்படக்கூடிய வாய்ப்பை பெற்றிருக்கிறார். அவருக்கு நாம் தோழமையோடு விடுக்கிற வேண்டுகோள், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் சமூகநீதிக்காக குரல்கொடுத்திருக்கிறார்கள், சமூக நீதியை பாதுகாத்திருக்கிறார்கள் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. அந்த சமூகநீதி கொள்கைக்கு நேர் எதிரியாக இருக்கக்கூடிய பா.ஜ.க-வை தூக்கி சுமப்பது, எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கு கருத்தியல் அடிப்படையில் செய்கிற மாபெரும் துரோகமாகும்.
எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்களை நெஞ்சிலே இறுத்தி, சமூகநீதிக்கான ஒரு இயக்கமாகவே அ.தி.மு.க-வை தொடர்ந்து நடத்துவதற்கு துணிந்து முன்வர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
நானும் சமூகநீதிக்கான போராட்டக் களத்தில் நிற்கிறவன் என்கிற உரிமையோடு இந்த வேண்டுகோளை முன்வைக்கிறேன்.
பா.ஜ.க-வை தூக்கி சுமப்பது அ.தி.மு.க-வுக்கும் நல்லதல்ல, தமிழ்நாட்டுக்கும் நல்லதல்ல. சமூகநீதிக்கும் நல்லதல்ல. தமிழ்நாட்டில் பா.ஜ.க காலூன்றுமேயானால், ஒட்டுமொத்த சமூக நல்லிணக்கம் பாதிக்கப்படும். மதத்தின் பெயரால் வன்முறைகள் தொடரும். வன்முறையைத் தூண்டுவார்கள்.
இத்தனை காலம் நாம் காப்பாற்றி வந்த சமூகநீதிக்கான மரபுகள், கூறுகள் அழித்தொழிக்கப்படும். ஆகவே இதையெல்லாம், கருத்தில் கொண்டு எடப்பாடி பழனிசாமி அரசியல் நிகழ்வுகளை மேற்கொள்ள வேண்டும், காய்களை நகர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்று கூறினார்.
இந்த வழக்கில் இ.பி.எஸ் எப்படி வெற்றி பெற்றார், ஓ.பி.எஸ் தொல்வியடைந்தார் என்ற கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், “இது அவர்களுக்கு இடையேயான உட்கட்சி பிரச்னை. அதற்குள் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. எடப்பாடி எப்படி வெற்றி பெற்றார். ஓ.பி.எஸ் எப்படி வீழ்ச்சி அடைந்தார் என்பதற்குள் நான் நுழைய விரும்பவில்லை. எடப்பாடி பழனிசாமி தனது சாதுரியத்தால் இந்த இடத்தை அடைந்திருக்கிறார். அவருக்கு ஏதோ ஒருவகையில் சங்பரிவார்களும் ஏதோவொரு வகையில் துணையாக இருக்கிறார்கள் என்பதை ஊகிக்க முடிகிறது. அந்த நிலையில் இருந்து, அந்த புள்ளியிலிருந்துதான், எச்சரிக்கையாக இருந்து அவர்களின் அரசியல் காய்கள் நகர்த்தப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று திருமாவளவன் கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/thirumavalavan-says-selection-of-edappadi-palaniswami-as-aiadmk-chief-has-sangh-parivar-background-621793/