
வயநாடு எம்பி ராகுல் காந்தி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு சூரத் நீதிமன்றம் அவருக்குத் தண்டனை வழங்கியதைத் தொடர்ந்து அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டுள்ளது.
மக்களவை செயலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், அரசியலமைப்புச் சட்டத்தின் 102(1)(e) விதிகளின்படி, தண்டனை விதிக்கப்பட்ட தேதியிலிருந்து அதாவது 23 மார்ச், 2023 முதல் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த அறிவிப்பின் நகல் முன்னாள் எம்.பி ராகுல் காந்திக்கு அனுப்பப்பட்டது.

மக்களவை செயலகம் ஏன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது?
இது நடைமுறையின் ஒரு பகுதியாகும். அக்டோபர் 13, 2015 அன்று ஒரு குறிப்பில், சிட்டிங் எம்.பி.க்கள் அல்லது எம்.எல்.ஏ.க்கள் மீதான தண்டனை வழக்கில், உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஏழு நாட்களுக்குள் தண்டனை உத்தரவுடன் சபாநாயகர், மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு கவனத்திற்கு கொண்டு வரப்படுவதை உறுதிசெய்ய வழக்குகளை கையாளும் துறைக்கு தகுந்த உத்தரவுகளை வழங்குமாறு மாநில தலைமைச் செயலாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 8(3) கூறுகிறது, எந்தவொரு குற்றத்திற்காகவும் இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாமல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரு நபர், அத்தகைய குற்றம் நிரூபிக்கப்பட்ட நாளிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார். மேலும் அவர் விடுவிக்கப்பட்டதிலிருந்து மேலும் ஆறு ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
எனவே, தகுதி நீக்கம் என்பது மக்களவை அறிவிப்பால் அல்ல, தண்டனையால் தூண்டப்படுகிறது. மக்களவையில் வெள்ளிக்கிழமையன்று அவை ஒத்திவைக்கப்படுவதற்கு முன்பு இருந்த ராகுலுக்கு, இந்த அறிவிப்பு முறையான நோட்டீஸ் மட்டுமே.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ வழக்கில், சம்பந்தப்பட்ட சட்டப் பேரவை நோட்டீஸ் வழங்குகிறது. உதாரணமாக, சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ., அசம் கான் வழக்கில், உத்தரப் பிரதேச சட்டப் பேரவை செயலகம், கடந்த ஆண்டு அக்டோபரில் தகுதி நீக்க அறிவிப்பை வெளியிட்டது.
இதில் சபாநாயகரின் அதிகாரம் இறுதியா?
Lok Prahari v Union of India (2018) வழக்கில் உச்சநீதிமன்றம் அதன் தீர்ப்பில், நீதிமன்றத்தால் தண்டனை நிறுத்தப்பட்டால், தண்டனையால் தூண்டப்பட்ட தகுதி நீக்கம் ரத்து செய்யப்படும் என்று தெளிவுபடுத்தியது. மேல்முறையீடு நிலுவையில் இருக்கும் போது தண்டனை நிறுத்தப்பட்டவுடன், தண்டனையின் விளைவாக தகுதி நீக்க நடவடிக்கை செய்ய முடியாது, என்று தீர்ப்பு கூறியது.
ராகுலின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டால், அவர் தொடர்பான உள்துறை செயலகத்தின் அறிவிப்பு அமலில் இருக்காது.
அரசியலமைப்பின் பிரிவு 102(1)(e) மற்றும் RP சட்டத்தின் பிரிவு 8 என்ன?
அரசியலமைப்பின் 102வது பிரிவு பாராளுமன்ற உறுப்பினரை தகுதி நீக்கம் செய்வதற்கான காரணங்கள் பற்றி கூறுகிறது.
சட்டப்பிரிவு 102(1) இன் துணைப்பிரிவு (e) கூறுகிறது, பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட எந்தவொரு சட்டத்தினாலோ அல்லது அதன் கீழ் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், ஒரு எம்.பி. தனது சபை உறுப்பினர் பதவியை இழப்பார். இந்த வழக்கில் சட்டம் RP சட்டம்.
RP சட்டத்தின் பிரிவு 8, சில குற்றங்களில் தண்டனைக்காக ஒரு சட்டமியற்றுபவர் தகுதி நீக்கம் செய்வதைக் கையாள்கிறது. இந்த ஏற்பாடு அரசியலை குற்றமாக்குவதைத் தடுப்பதையும், ‘கறை படிந்த’ சட்டமியற்றுபவர்களை தேர்தலில் போட்டியிடுவதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மக்களவை உறுப்பினர் பதவியில் ராகுல் என்ன இழக்கிறார்?
மக்களவை எம்.பி., என்ற முறையில், ராகுலுக்கு, டில்லியில் உள்ள லுட்யேன்ஸில் வீடு வாங்கும் தகுதி இருந்தது. அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தனது 12 துக்ளக் லேன் வீட்டை காலி செய்ய ஒரு மாதம் அவகாசம் இருக்கும் என வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2004ல் அமேதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ராகுலுக்கு வீடு ஒதுக்கப்பட்டது.
மக்களவை செயலகம், தகுதி நீக்க அறிவிப்பின் நகலை, மேல் நடவடிக்கைக்காக, எஸ்டேட் இயக்குனரகத்தின் தொடர்பு அதிகாரிக்கு அனுப்பியுள்ளது. இந்த பங்களா, மக்களவை குடியிருப்பு சொத்துக்களுக்கு சொந்தமானது என்பதால், காலி செய்யும் நடவடிக்கையை, மக்களவை செயலகம் துவக்க வேண்டும் என, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அனுபவிக்கும் அனைத்து சலுகைகளையும் ராகுல் இழக்கிறார்.
வயநாடு மக்களுக்கு எப்போது மக்களவையில் மீண்டும் ஒரு பிரதிநிதி கிடைக்கும்?
தேர்தல் ஆணையம் அந்த இடத்திற்கு இடைத்தேர்தலை அறிவிக்கலாம் – ஆசம் கானின் வழக்கில், கானின் 37-ராம்பூர் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான அட்டவணை (நாடு முழுவதும் நான்கு காலியிடங்களை நிரப்புவதற்கான இடைத்தேர்தலுடன்) சில நாட்களுக்குள் அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், சமீபத்திய லட்சத்தீவு எம்.பி பிபி முகமது பைசல் வழக்கில், எம்.பியின் தண்டனைக்குப் பிறகு ஜனவரி 18 ஆம் தேதி இடைத்தேர்தலை அறிவித்த தேர்தல் ஆணையம், ஃபைசலின் தண்டனையை கேரள உயர்நீதிமன்றம் ஜனவரி 25-ம் தேதி இடைநிறுத்திய பிறகு, ஜனவரி 30 ஆம் தேதி அந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டியிருந்தது.
இங்கே ராகுல் காந்திக்கு இருக்கு வாய்ப்புகள் என்ன?
ஒரு உயர் நீதிமன்றம் தண்டனைக்குத் தடை விதித்தால் அல்லது மேல்முறையீட்டை அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தால் அவரது தகுதி நீக்கம் திரும்பப் பெறப்படும். அவரது முதல் முறையீடு சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்திலும், பின்னர் குஜராத் உயர் நீதிமன்றத்திலும் இருக்க வேண்டும்.
அவர் நீதிமன்றங்களில் இருந்து தீர்வு பெறவில்லை என்றால், அவர் அவரது இரண்டு ஆண்டுகள் தண்டனை, மேலும் ஆர்பி சட்டத்தின் விதிகளின் கீழ் ஆறு ஆண்டுகள் சேர்த்து எட்டு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது.
இதற்கிடையே, மேல்முறையீடு செய்ய கால அவகாசம் கோரி அவரது வழக்கறிஞர் கிரிட் பன்வாலா சூரத் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/explained/rahul-gandhi-disqualified-what-happens-next-619738/