திங்கள், 27 மார்ச், 2023

1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 

ஏறத்தாழ 1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரமும், அதையடுத்து நிதிநிலை அறிக்கைகள் மீதான மூன்றாம் நாள் விவாதமும் நடைபெற்றது. அப்போது மகளிருக்கான உரிமைத் தொகை குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பு உலகெங்கும் உள்ளவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை செயல்படுத்தும் விதம் குறித்து விளக்கம் அளிக்கிறேன்.

மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்களின் நிலை என்ன என ஜி.கே.மணி கேள்வி எழுப்பினார். நவீனமயம் என்ற திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறோம். அறிவிக்காத திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். தாய்வழி சமூகம் தான் மனிதகுலத்தை வழிநடத்தி வந்துள்ளது. காலப்போக்கில் மதத்தின்பெயரால், ஆதிக்க வர்க்கத்தினரால் பெண்கள் வீட்டில் முடக்கப்பட்டார்கள்.

அரசுப்பணியாளர் தேர்வுகளில் பெண்கள் அதிகம் தேர்வாகி வருவது தமிழ்ச் சமூகத்தின் முதிர்ச்சியை காட்டுகிறது. ஆண்களின் உழைப்பிற்கு எந்தளவிற்கும் பெண்கள் குறைந்தவர்கள் இல்லை. ஓர் ஆணின் வெற்றிக்காகவும், குழந்தைகளின் உடல்நலம் காக்கவும் எத்தனை மணி நேரம் உழைத்திருப்பார்கள். அதற்கான ஊதியம் கணக்கிட்டிருந்தால், சட்டம் இயற்றாமலேயே சொத்தில் பங்கு பெற்றிருக்கலாம்.

Universal Basic Income என்ற பெயரில் உலகின் சில பகுதிகளில் பரிசோதனைகளின் அடிப்படையில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் வறுமை பாதியாகக் குறையும் எனவும், சிறு சிறு தொழில்களை செய்ய வாய்ப்புகளைப் பெற முடியும் என்றும் கூறுகின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக பெண்கள் தன்னம்பிக்கை பெற்றுள்ளதாகவும் கூறுகிறார்கள்.

இந்தத் திட்டம் யாருக்கு பயனுள்ளது என மக்களுக்கே தெரிகிறது. அனைவருக்கும் வீடு என அறிவிக்கப்பட்டால், வீடில்லாதவர்களுக்கு வீடு என்று பொருள். முதியோர் ஒய்வூதியம் என்றால் ஆதரவற்ற முதியோருக்கு என்று பொருள்.

வாழ்நாள் எல்லாம் ஓயாமல் உழைக்கும் பெண்களுக்கு அங்கீகாரம் தரவேண்டும், ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் வழங்குவதன் மூலம் அவர்களின் வறுமை ஒழிந்து சுயமரியாதையுடன் வாழ வேண்டும், ஆகிய இரண்டு நோக்கங்களை கொண்டது தான் மகளிர் உரிமைத்தொகை திட்டம்.

மீனவ மகளிர், கட்டுமான மகளிர், சிறு தொழில் நிறுவனங்களில் பணிபுரிவோர், என பல்வேறு வகைகளில் பணியாற்றும் பெண்கள் இத்திட்டத்தால் பயன்பெறுவார்கள்.

திமுக இதனை செய்துவிடுமோ என அச்சத்தை பல்வேறு வழிகளில் பேசி வந்தோருக்கு பதிலளிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். ஏறத்தாழ ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மகளிர் உரிமைத்தொகை அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். இந்த திட்டம், சமூக நீதி திட்டங்களிலேயே மாபெரும் முன்னெடுப்பு” என்று தெரிவித்தார்.

source https://news7tamil.live/rs-1000-per-month-for-1-crore-female-heads-chief-minister-m-k-stals-announcement.html