25 3 23
தமிழ்நாடு சட்டத்துறை மற்ற மாநிலங்களை விட சிறப்பாக செயல்பட்டு வருவதாக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ரூ.166 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் நீதிமன்ற கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, அமைச்சர்கள் ரகுபதி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ரூ.166 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் நீதிமன்ற கட்டடங்களுக்கு ரிமோட் மூலம் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆகியவற்றை காணொளி காட்சிகள் மூலம் திறந்து வைத்தனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, “அனைவருக்கும் வணக்கம். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, முதலமைச்சர், நீதிபதிகள், அமைச்சர்களுக்கு நன்றி. மதுரை ஒரு வரலாற்று மாநகரம். மதுரை வரலாற்றை பற்றி பேசியது நன்றாக இருந்தது. தமிழ்நாடு சட்டத்துறை மற்ற மாநிலங்களை விட சிறப்பாக செயல்படுகிறது.
ரூ.9000 கோடி இந்தியாவின் மாவட்ட நீதிமன்றங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. e-Court திட்டத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தொடங்கி இருப்பது வரவேற்கத்தக்கது. வரும் காலங்களில் காகிதம் இல்லா நீதிமன்றம் உருவாகும். கடைசி 3 வருடத்தில் 4 கோடியே 90 லட்சம் முக்கிய வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் நீதிமன்றம் மற்றும் நீதிபதிகளை குறை சொல்லவில்லை அனைவரும் ஒன்றினைந்து இதனை சரி செய்ய வேண்டும். மற்ற நாடுகளை விட நம் நாட்டில் மக்கள் தொகை அதிகமாக உள்ளது.
மற்ற நாடுகளில் 4 வழக்குகள் மட்டுமே ஒரு நாளைக்கு விசாரணைக்காக எடுக்கின்றனர். ஆனால் இந்திய நீதிபதிகள் ஒரு நாளைக்கு 60 வழக்கு எடுக்கின்றனர். அரசு அனைத்து விதத்திலும் உதவ தயாராக உள்ளது. மோடி அரசு தேவையான உள்கட்டமைப்பை செய்ய தயாராக உள்ளது. e-Court-க்கு ரூ.7000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மொழி மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழ் பயன்படுத்தப்படுகிறது. தமிழ் பழமை மற்றும் தொண்மை வாய்ந்த மொழி. மதுரை குறித்து அறிந்திருந்தாலும், இன்று தான் வரும் வாய்ப்பு கிடைத்தது. மதுரையின் கோயில் பின்புலமும், வரலாற்று பின்புலமும் ஆச்சரியமளிக்கிறது.
முதல்வரும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் இணைந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களைக் கொண்டு திறம்பட குறைகளைக் கண்டறிந்து, நிவர்த்தி செய்யும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர். தமிழக முதல்வர் மத்திய அரசின் நிதியை பயன்படுத்தி, வசதிகளை மேம்படுத்த முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். நீதிமன்ற வளாகங்களில் பெண்களுக்கான கழிப்பறை முக்கியம். உச்சநீதிமன்றத்தில் தமிழ் மொழி வருங்காலத்தில் வரும்.
கோவிட் காலத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உள்பட நீதிமன்றங்களின் செயல்பாடு பாராட்டத்தக்கது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அந்த காலங்களில் தொழில்நுட்ப வசதியை அளப்பரிய முறையில் பயன்பாட்டிற்கு கொணர்ந்தார். பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் நிலுவையில் இருப்பது அதிக வலியை ஏற்படுத்துகிறது. இது ஏற்கத்தக்கதல்ல.
நீதிமன்றமும், பார் கவுன்சிலும் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. சில சமயங்களில் சமூகத்திற்கு தவறான தகவலை அளிப்பது போன்ற செயல்பாடுகள் வருத்தமளிக்கிறது. அரசு அனைத்து விதங்களிலும் பக்கபலமாக இருக்கும்.
கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப்படும். அனைவரும் இணைந்து தொடர்ந்து செயல்படுவோம்.
மதுரையின் வரலாற்று சிறப்புகளை பார்வையிட 1 நாள் போதாது. 1 மாதம் தேவையென நினைக்கிறேன். விரைவில் மீண்டும் மதுரைக்கு வருவேன். தென்னிந்திய உணவுகள் மிகவும் பிடிக்கும். இன்று காலை மிகவும் சுவையான தோசை சாப்பிட்டேன். 12 வயதில் சாப்பிட்ட நிலையில் இன்று மீண்டும் உண்ண வாய்ப்பு கிடைத்தது. நிச்சயம் எனது டைரியில், தோசை காலை உணவுக்கு ஏற்றது என குறித்துவைப்பேன்” என்று தெரிவித்தார்.
source https://news7tamil.live/tamil-nadu-legal-system-is-doing-better-than-other-states-union-minister-kiran-rijiju.html