27 3 23

திருச்சி மணப்பாறை அருகே அஞ்சல்காரன் பட்டியைச் சேர்ந்தவர் வில்சன் (26). இவருக்கு திருமணம் ஆகி இரண்டு வயதில் குழந்தை உள்ளது. வில்சன் வையம்பட்டியில் உள்ள டீக்கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டு மீது இருந்த மோகத்தால் பணம் செலுத்தி விளையாடி வந்துள்ளார். மொபைல் போனை தனியாக எடுத்துச் சென்று விளையாடி வந்துள்ளார். முதலில் விளையாட்டில் பணத்தை இழந்த அவர், இழந்த பணத்தை எடுத்து விடலாம் என தொடர்ந்து விளையாடி வந்துள்ளார்.
சுமார் ரூ.5 லட்சத்திற்கும் மேல் கடன் வாங்கி விளையாடிய நிலையில் மீண்டும் பணத்தை எடுக்க முடியாததால், மனம் உடைந்த வில்சன் இன்று வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக கடந்த 25-ம் தேதி இதேபோல் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனை ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் உயிரிழப்பு சம்பவங்கள் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
இந்தநிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா இரண்டாவது முறையாக சட்டப்பேரவையில் இயற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்
source https://tamil.indianexpress.com/tamilnadu/trichy-youngman-ends-life-after-loss-in-online-rummy-620585/