தமிழகத்தில் வியாழக்கிழமை, 86 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநிலத்தில், செயலில் உள்ள கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 500 ஐத் தாண்டி 517 ஆக உயர்ந்துள்ளது,
RTPCR சோதனைக்காக 3,162 பேரிடமிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டன, மேலும் வாராந்திர பாசிட்டிவிட்டி விகிதம் வியாழக்கிழமை 2 சதவிகித்தை தாண்டியது.
சென்னையில் 19 புதிய பாதிப்புகளும், செங்கல்பட்டில் 12, சேலம் மற்றும் கோவையில் தலா 8, கிருஷ்ணகிரி, மதுரை மற்றும் திருவள்ளூரில் தலா 5 கொரோனா தொற்றும் பதிவாகியுள்ளன.
ஈரோட்டில் மூன்று புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், மாநிலத்தின் மற்ற 17 மாவட்டங்களில் ஒன்று முதல் இரண்டு புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் ரேண்டம் சோதனையின் போது ஓமன் நாட்டைச் சேர்ந்த பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
517 செயலில் உள்ள பாதிப்புகளில், அவர்களில் 16 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர், இதில் யாரும் ஆக்ஸிஜன் ஆதரவு அல்லது தீவிர சிகிச்சையில் இல்லை.
‘இன்சகாக்’ எனப்படும் இந்திய கொரோனா பகுப்பாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின்படி, எக்ஸ்.பி.பி., – 1.16 என்ற புதிய உருமாறிய கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்துள்ளது.
இதனிடையே தமிழ்நாடு உட்பட 8 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
குறிப்பாக மகாராஷ்ட்ரா, குஜராத், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி, இமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிக அளவு பதிவாகி இருப்பதாக அவர் கூறினார்.
மேலும் கொரோனா அதிகம் பரவும் மாநிலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி இருப்பதாக ராஜேஷ் பூஷன் கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/corona-virus-in-tamilnadu-influenza-h3n2-virus-619220/
24 3 23