பொய்யான வீடியோக்களை சரியானவை என்று நம்பி வரும் எண்ணத்தை போக்க வேண்டும் என்று பீகார் மாநில கிராம வளர்ச்சித் துறை செயலாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடமாநில தொழிலாளர்கள், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் வைரலாக பரவிய பொய் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தின. இதுதொடர்பான செய்திகள் சமூக ஊடக பதிவுகள் வைரலாக பரவிய நிலையில் தமிழ்நாடு காவல்துறை அதை மறுத்து செய்தி வெளியிட்டது. தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு இந்தச் செய்திகளை நிராகரித்து ஆங்கிலத்தில் காணொளி ஒன்றை பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் பீகார் மாநில தொழிலாளர்களில் நிலையை நேரில் ஆய்வு செய்வதற்காக மாநில கிராம வளர்ச்சித்துறை செயலாளர் பாலமுருகன் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்து பீகார் அரசு உத்தரவிட்டது. இவர்கள் இன்று சென்னை வந்தடைந்தனர். பீகார் மாநில அதிகாரிகளுடன் தமிழக பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் உள்ளிட்ட ஆதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு பேட்டியளித்த பீகார் மாநில கிராம வளர்ச்சித்துறை செயலாளர் பாலமுருகன் கூறுகையில், பீகார் மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களிடமும் தொலைபேசி வாயிலாக பேசினோம். தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. தமிழ்நாடு அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பொய்யான வீடியோக்களை சரியானவை என்று நம்பி வரும் எண்ணத்தை போக்க வேண்டும். பொய்யான வீடியோக்கள் திருப்பூர் மற்றும் கோயமுத்தூர் மாவட்டங்களில் இருந்து வந்ததை தொடர்ந்து அந்த இடங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
source https://news7tamil.live/dont-be-fooled-by-fake-videos-bihar-officer-balamurugan.html