திங்கள், 6 மார்ச், 2023

இந்திய அளவில் அரசியல் ஒற்றுமை ஏற்படக்கூடாது என்பதால் வதந்தி பரப்புகிறார்கள் – முரசொலி தலையங்கம்

 

அகில இந்திய ரீதியாக அரசியல் ஒற்றுமை உருவாகி விடக்கூடாது என்பதால் வதந்தி பரப்புகிறார்கள் என  திமுக நாளேடான முரசொலியின் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திமுக வி நாளேடான முரசொலியின் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..

முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்த நாள் கூட்டத்தில் பேசிய அகிலேஷூம், தேஜஸ்வீயும் முதலமைச்சரை வெகுவாகப் புகழ்ந்து பேசினார்கள். சமூகநீதியை நிலைநாட்டுவதற்கான அவரது முயற்சிகள் அனைத்தையும் வரவேற்பதாக உ.பி.யின் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் சொன்னார். பீகார் மாநிலத்தின் துணை முதலமைச்சராக இருக்கக் கூடிய தேஜஸ்வீ பேசும் போது, ‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது’ என்று சொன்னார். பீகார் மக்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகச் சொன்னார்.

மார்ச் – 1 அன்றுதான் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அவர்களின் பிறந்தநாள் என்றும் சொல்லி, ‘எங்கள் முதலமைச்சர் உங்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கச் சொன்னார்’ என்றார் தேஜஸ்வீ. இவற்றை பா.ஜ.க.வால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த ஒற்றுமையைச் சீர்குலைக்கச் செய்த சதிச்செயல் தான், ‘தமிழ்நாட்டில் வடமாநிலத்தவரை கொல்கிறார்கள்’ என்ற வதந்தியாகும்.

இந்த வதந்தி பரப்பப்பட்டதன் உள்நோக்கம் என்பது, அகில இந்திய ரீதியாக ஒரு அரசியல் ஒற்றுமை உருவாகி விடக்கூடாது என்பதால் தான். பா.ஜ.க.வுக்கு எதிரான அரசியல்  இந்தியா முழுமைக்கும் ஓரணியாக ஆகிவிடக் கூடாது என்பதால்தான் இந்த வதந்தி பரப்பப்படுகிறது.

தமிழ்நாட்டில் இந்தியில் பேசியதால் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் 12 பேர் கழுத்தறுத்து கொல்லப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் முதன்முதலாகச் செய்தி பரப்பியவர் உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உமாராவ். இவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியது உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் தமிழ்நாடு காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்தச் செய்திக்கு மிகப்பெரிய சதிப் பின்னணி இருக்கிறது என்பதை பிரசாந்த் உமாராவ் வெளியிட்ட டுவிட்டர் பதிவுக்கு பயன்படுத்திய புகைப்படமே காட்டிக் கொடுத்துவிட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வீ  ஆகியோர் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தைப் போட்டு இந்த செய்தியை போட்டுள்ளார் பிரசாந்த் உமாராவ். அதுவும் இப்போது எடுக்கப்பட்ட புகைப்படமல்ல. கடந்த ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி சென்னையில் நடந்த விழாவில்தான் தேஜஸ்வீக்கு நினைவுப்பரிசு வழங்கினார் முதலமைச்சர் . அந்தப் படத்தைத் தேடிப்பிடித்து போட்டு, இந்திக்காரர்களைக் கொல்கிறார்கள் என்று செய்தி வெளியிட்டதில் தான் இவர்களது அரசியல் உள்நோக்கம் அம்பலப்பட்டு நிற்கிறது.” என முரசொலி தெரிவித்துள்ளது.

– யாழன்


source https://news7tamil.live/they-are-spreading-rumors-because-there-should-be-no-political-unity-at-the-indian-level-murasoli-editorial.html