நாட்டில் புழக்கத்தில் இருந்த 97%க்கும் அதிகமான ரூ.2,000 நோட்டுகள் வங்கிகளுக்குத் திரும்பியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்த போது 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து, கடந்த மே 19-ம் தேதி, புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது.
அதன்படி மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளில் டெபாசிட் செய்யவும், அதனை 500 ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளவும் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து காலக்கெடு அக்டோபர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்பின்னர் ரிசர்வ் வங்கியின் பிராந்திய அலுவலகங்களில் மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மேலும் தபால் மூலமாகவும் ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு இந்த நோட்டுகளை பொதுமக்கள் அனுப்பி, வங்கிக் கணக்கில் வரவு வைத்துக்கொள்ள முடியும் எனவும் அறிவித்தது. அரசுத் துறைகள் வரம்பு ஏதுமின்றி 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசா்வ் வங்கி அலுவலகங்களில் மாற்றிக்கொள்ள முடியும். ஆனால், பிற வங்கிக் கிளைகளில் வைப்போ அல்லது மாற்றிக்கொள்ளவோ முடியாது என்ற நிலை தொடர்கிறது.
இந்நிலையில், தற்போது வரை 97 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்குத் திரும்பியிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையில், ”ரூ. 2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளில், ரூ. 3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.
அவற்றில், அக்டோபா் 31-ம் தேதி வரை 97%த்திற்கு அதிகமான நோட்டுகள் வங்கிகளுக்குத் திரும்பியுள்ளன. மேலும், ரூ.10,000 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளன. மக்கள் இந்த ரூபாய் நோட்டுகளை ரிசா்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பியோ மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளது.
source https://news7tamil.live/97-of-rs-2000-notes-withdrawn-rbi-notice.html