வெள்ளி, 15 மார்ச், 2019

மும்பை சத்ரபதி ரயில் நிலையத்தில், நடைமேம்பாலம் இடிந்த விபத்தில் 6 பேர் பரிதாப பலி! March 15, 2019

Image
மும்பையில் ரயில்வே நடைமேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து, மாநில அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 
இந்தியாவின் வர்த்தக நகரமான மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் இதயப் பகுதியாக திகழ்கிறது சத்ரபதி சிவாஜி டெர்மினல் ரயில் நிலையம். அதன் அருகே சர்ச்கேட் உள்ளிட்ட முக்கிய வர்த்தக இடங்கள் உள்ளன. மும்பை நகரின் அனைத்து பகுதிகளையும் ஒன்றிணைக்கும், சென்ட்ரல் லைன், வெஸ்டன் லைன் மற்றும் ஹார்பன் லைன் ஆகிய மூன்று வழித்தடங்களையும் இணைக்கும் மையப்புள்ளியாகவும் இந்த ரயில் நிலையம் உள்ளது. இதன் காரணமாக, நாள்தோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் இடமாக சத்ரபதி சிவாஜி டெர்மினல் ரயில் நிலையம் திகழ்கிறது. 
இந்த நிலையில், நேற்று மாலை வழக்கம் போல் பணி முடிந்து, மும்பை நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்லக்கூடிய மக்களும் இந்த ரயில் நிலையம் நோக்கி வந்துக் கொண்டிந்தனர். ரயில் நிலையத்துக்கு வெளியே உள்ள சாலையில் இருந்து, ரயில் நிலைய பிளாட்பாரத்தை இணைக்கும் ரயில்வே நடை மேம்பாலத்தின் வழியாக ஏராளமானோர், ரயில் நிலையத்திற்கு  வந்தனர். அப்போது, திடீரென நடைபாதையின் மையப்பகுதி இடிந்து, கீழே சாலையில் சென்றுக்கொண்டிருந்தவர்கள் மீது விழுந்தது. இதில், பாலத்தில் சென்றவர்கள் மற்றும் கீழே சாலையில் நடந்து சென்றவர்கள் என சுமார் 40-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கினர். இதனால், அந்த இடமே மரண ஓலத்தில் அதிர்ந்தது. 
இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி 6 பேர் உயிரிழந்தனர். 
பலத்தக் காயமடைந்த 36-க்கும் அதிகமானோர் அருகேயுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, இந்த சம்பவம், ஓர் விபத்து என்பதையும் தாண்டி அரசியலாக மாறியுள்ளது. ரயில்வே நடை மேம்பாலங்கள் முறையாக பராமரிக்கப்படாததால், இந்த விபத்து நிகழ்ந்ததாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. 
அதேநேரத்தில், இது ஓர் துரதிர்ஷ்டவசமான சம்பவம் என முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார். இந்த நிலையில், விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களை, ஆளும் கட்சியினர், எதிர்க் கட்சியினர் மற்றும் மும்பை மாநகராட்சி மேயர் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தூங்கா நகரம் என்றும் வர்ணிக்கப்படும் மும்பை நகரம், நேற்றைய விபத்து காரணமாக, உண்மையிலேயே தூக்கத்தை தொலைத்துவிட்டு, அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. 

credit ns7.tv