செவ்வாய், 23 ஜனவரி, 2024

டெல்லியில் இருந்து ஆளப்படுகிறது மேகாலயா” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

 

” மேகாலயா டெல்லியில் இருந்து ஆளப்படுகிறது ” என  ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

இந்தியாவின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடைப்பயணமான ‘இந்திய நீதி பயணம்’ கடந்த ஜன. 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கியது.  இந்த நடைப்பயணம் மொத்தம் 6,713 கி.மீ. தொலைவுக்கு மேற்கொள்ளப்பட உள்ளது.  தொடர்ந்து 110 மாவட்டங்கள்,  100 மக்களவைத் தொகுதிகள் வழியாக 67 நாள்கள் இப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நடைப் பயணம் மார்ச் 20-ம் தேதி மும்பையில் நிறைவடைய உள்ளது.  மணிப்பூரை தொடர்ந்து அருணாச்சல பிரதேசம் மற்றும்  அசாமுக்கு ராகுல் காந்தி நடைபயணம் வந்த போது அவர் வந்த பஸ்சை சுற்றி வளைத்த பாஜ தொண்டர்கள் ஜெய் ஸ்ரீராம், மோடி, என கோஷமிட்டனர். கைகளில் கம்புகளை வைத்திருந்த தொண்டர்கள் ஒற்றுமை யாத்திரைக்கு எதிராகவும் கூச்சலிட்டனர்.

அவர்களை தடுக்க முயன்ற அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் பூபன் போராவை பாஜவினர் தாக்கினர். இதில், அவரது மூக்கு, வாயில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்த ராகுல் காந்தி உடனே பஸ்சில் இருந்து வெளியே இறங்கி அவர்களுடன் பேச வந்தார். பின்னர் பஸ்சில் ஏறிய அவர் அங்கு நின்ற பாஜவினரை பார்த்து பறக்கும் முத்தம் கொடுத்தார். இதன் பிறகு அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

இந்நிலையில்  அசாம் மாநிலத்தில் உள்ள படாதிரவாதன் கோயிலுக்கு சென்ற ராகுல் காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியை கோயிலுக்குள் அனுமதிக்காததால் போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாகோன் கோயிலில் அனுமதி மறுக்கப்பட்டதால்  அசாம் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று ராகுல் காந்தி மோரிகான் பகுதி வழியாக மேகலயாவிற்கு சென்றார்.

மேகலாயவின் ஏற்பாடு செய்யப்பட்ட பொது நிகழ்ச்சிகளில் அவர் தெரிவித்ததாவது..

“ மேகாலயா இங்கிருந்து ஆளப்படவில்லை, டெல்லியில் இருந்து ஆளப்படுகிறது.  இதை ஏற்க முடியாது.  கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டத்தை நாடு எதிர்கொள்கிறது.  மேகாலயா அரசு நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த அரசு என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.  ஆனால் அதன் பிறகு அவர் அதே அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்தார்” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

source https://news7tamil.live/meghalaya-is-ruled-from-delhi-rahul-gandhi-alleges.html