ஞாயிறு, 21 ஜனவரி, 2024

ஜாதி, மதம், மொழியால் நாட்டை பிரிக்கிறது – ராகுல் காந்தி விமர்சனம்!

 

ஜாதி, மதம் மற்றும் மொழியின் பெயரால் பாஜக தங்களுக்குள் சண்டையிட மக்களைத் தூண்டுகிறது. நாட்டை பிரிக்கிறது. பாஜக ஒரு சில தொழிலதிபர்களின் நலனுக்காக பாடுபடுகிறதே தவிர, மிகவும் கஷ்டப்படும் மக்களின் நலனுக்காக அல்ல என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடைப்பயணமான ‘இந்திய நீதி பயணம்’ கடந்த ஜன. 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கியது. இந்த நடைப்பயணம் மொத்தம் 6,713 கி.மீ. தொலைவுக்கு மேற்கொள்ளப்பட உள்ளது. தொடர்ந்து 110 மாவட்டங்கள், 100 மக்களவைத் தொகுதிகள் வழியாக 67 நாள்கள் நடைபெற உள்ளது.

இந்த நடைப் பயணம் மார்ச் 20-ம் தேதி மும்பையில் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் இன்று ராகுல் காந்தியின் ‘இந்திய நீதிப் பயணம்’ அருணாச்சல பிரதேசம் சென்றடைந்தது. தொடர்ந்து ராகுல் காந்தியை, அருணாச்சல பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் நபம் துகி வரவேற்றார். பின்னர் ராகுல் காந்தி, மக்கள் அளித்த அன்பான வரவேற்புக்கு நன்றியை தெரிவித்தார். பின்னர் பாரம்பரியமிக்க நிஷி தலைப்பாகையுடன் டோய்முக் நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டார்.

பின்னர் மேடையில் பேசிய ராகுல் காந்தி கூறியதாவது:

“ஜாதி, மதம் மற்றும் மொழியின் பெயரால் பாஜக தங்களுக்குள் சண்டையிட மக்களைத் தூண்டுகிறது. நாட்டை பிரிக்கிறது. பாஜக ஒரு சில தொழிலதிபர்களின் நலனுக்காக பாடுபடுகிறதே தவிர, மிகவும் கஷ்டப்படும் மக்களின் நலனுக்காக அல்ல. மறுபுறம், காங்கிரஸ் மக்களை ஒன்றிணைப்பதற்கும் அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் செயல்படுகிறது. ஜனவரி 14-ம் தேதி மணிப்பூரில் இருந்து தொடங்கி மார்ச் 20-ம் தேதி மும்பையில் முடிவடையும் 6,713 கிமீ நீளமுள்ள யாத்திரை, வடகிழக்கு பிராந்திய மக்களின் துன்பங்களை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நாங்கள் அருணாச்சல பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்தை வழங்கினோம். ஏழைகளின் பிரச்னைகளை எழுப்பவும், இளைஞர்கள், பெண்கள் மற்றும் சமூகத்தின் நலிந்த பிரிவினரின் முன்னேற்றத்திற்காகவும் எங்கள் கட்சி எப்போதும் தயாராக உள்ளது. பாஜக ஆட்சியில், மக்களின் குறைகளைக் கேட்க அரசு தயாராக இல்லை. அவர்களின் பிரச்னைகளை ஊடகங்கள் எழுப்பவில்லை. யாத்திரையின் போது, காலை முதல் மாலை வரை பல மணிநேரம் பயணித்து, மக்களின் வலி மற்றும் துன்பங்களை கேட்கும் இடங்களில் நின்றுகொண்டிருக்கிறேன்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


source https://news7tamil.live/bjp-is-dividing-the-country-on-the-basis-of-caste-religion-and-language-rahul-gandhi-criticizes.html#google_vignette