செவ்வாய், 23 ஜனவரி, 2024

I.N.D.I.A. கூட்டணியின் வெற்றியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சேர்ப்போம் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

 

பாஜகவை வீழ்த்தி இந்தியா கூட்டணியின் வெற்றியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சேர்ப்போம்  என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம்,  பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநாடு ஜனவரி 22ம் தேதி நடைபெற்றது.  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. திமுக இளைஞரணி மாநாட்டை கொடி ஏற்றி தொடங்கி வைத்தார்.  இம் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றுள்ளனர். மாநாட்டு திடலுக்கு வருகை புரிந்த முதலமைச்சர் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மாநாட்டில், திமுக இளைஞரணியின் செயலாளரும்,  தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் பதவி நீக்கம் மற்றும் நீட் விலக்கு உள்ளிட்ட 25 தீர்மானங்களை வாசித்தார்.  இதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்பி உட்பட திமுக தலைவர்கள் சிறப்புரை ஆற்றினர்.

இந்த நிலையில் இளைஞரணி மாநாட்டின் வெற்றி குறித்து தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது..

“ சேலத்தில் நடைபெற்ற  இளைஞரணியின் மாநில மாநாட்டின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி.  மாநாட்டின் வெற்றி,  2024 மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கட்டும்.  பாஜகவிற்கு முடிவுகட்டி,  அதிமுகவை வீழ்த்தி இந்தியா கூட்டணியின் வெற்றியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரங்களில் சேர்க்க அயராது உழைப்போம்” என அமைச்சர் உதயநிதி  தெரிவித்துள்ளார்.

source https://news7tamil.live/we-will-defeat-the-bjp-and-add-the-victory-of-the-india-alliance-to-chief-minister-m-k-stalin-minister-udayanidhi-stalins-letter.html

Related Posts: