புதன், 31 ஜனவரி, 2024

காந்தியடிகளைச் சுட்டுக் கொன்ற மதவெறி, நாட்டின் மத நல்லிணக்கத்தை நோக்கி தனது துப்பாக்கியை நீட்டுகிறது” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

 

காந்தியடிகளைச் சுட்டுக் கொன்ற மதவெறி, நாட்டின் மத நல்லிணக்கத்தை நோக்கி தனது துப்பாக்கியை நீட்டுகிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட தினமான இன்று இந்தியா முழுவதும் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது. காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு ஜனவரி 30 ஆம் தேதியை மத நல்லிணக்க நாளாக கடைபிடித்து மதவெறிக்கு எதிராக உறுதிமொழி ஏற்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை மத நல்லிணக்க நாளாக அனுசரிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் “மதவெறிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்”  என்கிற தலைப்பில் போஸ்டர்கள் ஒட்டினர்.

இதனைத் தொடர்ந்து திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மத நல்லிணக்க உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், எ.வ.வேலு மற்றும் திமுகவினர் திரளாக கலந்து கொண்டு மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..

” காந்தியடிகளைச் சுட்டுக் கொன்ற மதவெறி,  இன்று நாட்டின் மத நல்லிணக்கத்தை நோக்கி தனது துப்பாக்கியை நீட்டுகிறது. நாம் ஒவ்வொருவரும் மத நல்லிணக்கத்தை காக்கும் கவசமாக இருக்க வேண்டியது காலத்தின் அவசியம் என்பதை உணர்ந்து ஒன்றிணைந்து செயல்பட இந்நாளில் உறுதியேற்போம். மதவெறிக்கு_முற்றுப்புள்ளி வைப்போம்.”  என  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


source https://news7tamil.live/bigotry-which-shot-dead-gandhijis-is-pointing-its-gun-at-religious-harmony-in-the-country-minister-udayanidhi-stalin.html#google_vignette