செவ்வாய், 23 ஜனவரி, 2024

பட்டியலின மாணவருக்கு குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து கொடுத்த விவகாரம் – குற்றம் புரிந்த மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி மறுப்பு!

 

திருச்சி தேசிய சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் சக மாணவர்கள் பட்டியலின மாணவருக்கு குளிர்பானத்தில் சிறுநீரை கலந்து கொடுத்ததாக எழுந்த புகாரில் குற்றம் புரிந்த மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகள் எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி ராம்ஜி நகரை அடுத்துள்ள நவலூர் குட்டப்பட்டில் செயல்பட்டு வரும் தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில்,  இளங்கலை சட்டப்படிப்பு இறுதியாண்டு  படித்து வரும் பட்டியலின மாணவருக்கு,  கடந்த 6ம் தேதி இரவு சக மாணவர்கள் இருவர் குளிர்பானத்தில் சிறுநீரை கலந்து கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனை மறுநாள் அம்மாணவனிடம் கூறி கேலி,  கிண்டல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவன் இச்சம்பவம் குறித்து தனது பேராசிரியர்களிடம் தெரிவித்துள்ளார்.  புகார் பல்கலைகழகத்தின் துணைவேந்தருக்கு அனுப்பப்பட்டது.  இதனைத் தொடர்ந்து குற்றம் புரிந்த இரண்டு மாணவர்களும் கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.  இதனைத் தொடர்ந்து இந்நிகழ்வு குறித்து விசாரணை மேற்கொள்ள 3 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

விசாராணை நடந்து கொண்டிருக்கும் போதே பாதிக்கப்பட்ட மாணவர் புகாரை திரும்ப பெற முயற்சித்துள்ளார்.  ஆனால்,  ராகிங் சட்டவிதிகளின் படி புகாரை திரும்ப பெற இயலாது எனவும்,  உரிய முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பல்கலைகழக பதிவாளர் விளக்கமளித்திருந்தார்.  விசாரணையில், மாணவர்கள் ராகிங் செய்யும் நோக்கத்திலேயே இது போன்று செய்ததாக விசாரணைக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இதனையடுத்து,  விசாரணையின் அடிப்படையில், பல்கலைக்கழக பதிவாளர் பாலகிருஷ்ணன் குற்றத்தில் ஈடுபட்ட 2 மாணவர்கள் மீது திருச்சி ராம்ஜிநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.  இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பரிந்துரை குழு குற்றம் புரிந்த இரண்டு மாணவர்களையும் நடப்பு கல்வியாண்டின் தேர்வை எழுத அனுமதிக்க கூடாது என பரிந்துரைத்தது.  இதனை ஏற்ற சட்டப் பல்கலைக்கழகம் குறிப்பிட்ட இரண்டு மாணவர்களும் தங்களது செமஸ்டரை அடுத்த கல்வி ஆண்டில் மீண்டும் தொடர உத்தரவு பிறப்பித்துள்ளது.


source https://news7tamil.live/the-matter-of-giving-urine-to-a-student-in-a-cold-drink-students-who-have-committed-the-crime-are-denied-permission-to-write-the-exam.html#google_vignette