புதன், 24 ஜனவரி, 2024

அசாமில் காங். யாத்திரையை தடுத்து நிறுத்திய போலீஸ்: தள்ளுமுள்ளு, மோதல்; ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு

 காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அசாமில் ​​பாரத் ஜோடோ நீதி யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.  செவ்வாயன்று குவஹாத்தி நகருக்குள் யாத்திரை நுழைய முயன்றபோது, ​​யாத்திரையில் பங்கேற்றவர்களுக்கும், அசாம் காவல்துறையினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதை அடுத்து, ராகுல் காந்தி மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள் மீது அசாம் காவல்துறை எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.  


இந்த சம்பவத்தில் காங்கிரஸ் கட்சியின் அசாம் தலைவர் பூபென் போரா உட்பட பலர் காயமடைந்தனர்.

“வன்முறையை தூண்டுதல், பொது சொத்துக்களுக்கு சேதம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால், கன்ஹையா குமார் மற்றும் பிற நபர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார். 



X பக்கத்தில் அவர் கூறுகையில், குற்றவியல் சதி, சட்டவிரோதமாக ஒன்றுகூடல் மற்றும் கலவரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். 

முன்னதாக சர்மா ராகுல் காந்தி கூட்டத்தைத் தூண்டியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது. கவுகாத்தி நகரில் யாத்திரை நடைபெற்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனக் கூறி நகருக்குள் யாத்திரை அனுமதிக்கப்படாது என்று கூறியிருந்தார். இதையடுத்து நகருக்குள் யாத்திரை நுழைய முயன்ற போது போலீசார் காங்கிரஸ் உறுப்பினர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு மோதல் ஏற்பட்டது. பலர் இதில் காயமடைந்தனர். 

இந்த சம்பவத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, அசாமில் பாரத் ஜோடோ நியாய யாத்திரையை சீர்குலைப்பதன் மூலம் காங்கிரஸுக்கு சர்மா உதவுகிறார் என்றார். 

“உண்மையில், யாத்திரைக்கு எதிராக அஸ்ஸாம் முதல்வர் என்ன செய்கிறார்...  அது நமக்கு பயனளிக்கிறது. நமக்கு விளம்பரம் தேடிக் கொடுக்கிறார். ஒருவேளை அசாம் முதல்வருக்கு  பின்னால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருக்கலாம். அவர்கள் நமக்கு உதவுகிறார்கள்... அதனால் நாம் பலன் அடைகிறோம். அசாமின் முக்கியப் பிரச்சினை யாத்திரையாக மாறியுள்ளது,” என்றார்.

வழக்கு குறித்து பேசிய ராகுல், அசாம் மக்கள் பா.ஜ.க அரசுக்கு எதிராக இருப்பதால் அவர்களது மனதில் பயம் வந்துவிட்டது.  அதனால் எங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது என்றார். 

செவ்வாய்கிழமை காலை, யாத்திரையில் பங்கேற்பாளர்கள் மேகாலயாவிலிருந்து கவுகாத்தி நோக்கி நெடுஞ்சாலையில் பயணம் செய்தனர்.  கானாபராவில், நெடுஞ்சாலையில் இருந்து நகருக்குள் செல்லும் சாலை காவல்துறையினரால் தடுக்கப்பட்டிருப்பதைக் கண்டனர். 

ராகுல் காந்தி பயணித்த பேருந்திற்கு முன்னால், நடைபயணமாக வந்த ஆதரவாளர்கள் காவல்துறையினரிடம் இதுகுறித்து கேட்டனர். வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மோதல் ஏற்பட்டது. தடுப்புகளை உடைத்து ஆதரவாளர்கள் முன் நகருக்குள் செல்ல முயன்றனர் என்று அசாம் காவல்துறை கூறியது. 

“போலீசார் லத்தியைப் பயன்படுத்தினார்கள், என் கைகளிலும் கால்களிலும் காயங்கள் ஏற்பட்டன. மேலும் பலர் காயமடைந்துள்ளனர்” என்று யாத்திரையின் ஒரு பகுதியாக இருந்த காங்கிரஸ் தொழிலாளி நவீன் குமார் பாஸ்வான் கூறினார்.

மாநில காங்கிரஸ் தலைவர் போரா மற்றும் கட்சியின் தலைவர் ஜாகிர் உசேன் சிக்தர் ஆகியோர் கைகலப்பில் காயமடைந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு அசாமின் சோனிட்புட் மாவட்டத்தில் பாஜக கொடிகளை ஏந்திய ஒரு குழு யாத்திரையின் வாகனங்களைத் தாக்க முயன்றபோது போரா அப்போதும் காயமடைந்தார். 

செவ்வாய்கிழமை சம்பவம் நடந்த இடத்தை அடைந்த ராகுல் காந்தி, பேருந்தின் மீது ஏறி காங்கிரஸ் தொண்டர்களிடம் பேசினார். அப்போது "இந்த சாலையில், பஜ்ரங் தளம் முன்பு ஒரு பேரணியை நடத்தியது, பாஜக தலைவர் ஜே.பி நட்டா ஜி ஒரு பேரணியை நடத்தினார். ஆனால் காங்கிரஸ் பாதயாத்திரை இங்கு நிறுத்தப்படுகிறது. இங்கு பேரிகார்டு தடுப்பு இருந்தது. நாங்கள் அதை உடைத்து எறிந்தோம், ஆனால் நாங்கள் சட்டத்தை மீற மாட்டோம். அசாம் முதல்வர் சட்டத்தை உடைக்கலாம், உள்துறை அமைச்சர் உடைக்கலாம், பிரதமர் உடைக்கலாம், ஆனால் காங்கிரஸ் கட்சியினர் அதை உடைக்க மாட்டார்கள் என்றார்.

நாம் பலவீனமானவர்கள் என்று நினைக்காதீர்கள்... ஆனால் நாம் அனைவரும் ‘பாபர் ஷேர் (சிங்கங்கள்)’. உங்கள் பலத்தை உணர்ந்து கொள்ளுங்கள்” என்று கட்சி தொண்டர்கள் மத்தியில் கூறினார்.

செவ்வாய்க்கிழமை மதியம் 12.30 மணியளவில், அதே நெடுஞ்சாலை வழியாக யாத்திரை தொடர்ந்தது.

குவஹாத்தி வழியாகச் சென்று அவர்களின் அடுத்த இலக்கான கம்ரூப் மாவட்டத்தில் உள்ள ஹாஜோவை அடைய, நெடுஞ்சாலையைப் பயன்படுத்த யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டதாக அசாம் டிஜிபி தெரிவித்தார். இருப்பினும், செவ்வாயன்று, யாத்திரையில் பங்கேற்பாளர்கள் பாதையை மாற்ற "வலியுறுத்தினர்" என்று அவர் கூறினார்.

இந்த விவகாரத்தை அடுத்து முதல்வர் சர்மா காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். “இது அசாம் கலாச்சாரம் அல்ல. இது அமைதியான மாநிலம். இது போன்ற  ‘நக்சலைட் தந்திரங்கள்’ நமது கலாச்சாரத்திற்கு முற்றிலும் அந்நியமானது. உங்களின் ஆக்ரோசமான நடத்தை மற்றும் சட்ட மீறல்  தற்போது கவுகாத்தியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது,” என்று அவர் X  தளத்தில் கூறினார். 

முன்னதாக அன்றைய தினம்  தனியார் பல்கலைக்கழக மாணவர்களுடன் ராகுல் காந்தி உரையாட இருந்த நிகழ்ச்சிக்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் மேகாலயாவில் உள்ள தனியார் பல்கலைக்கழக மாணவர்களுடன் உரையாடுவதில் இருந்து தான் 

முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் மேகாலயாவில் உள்ள தனியார் பல்கலைக்கழக மாணவர்களுடன் உரையாடுவதில் இருந்து தான் தடுக்கப்பட்டதாக ராகுல் காந்தி கூறினார்.

இந்நிலையில் அசாம்- மேகாலயா எல்லையில் கூடிய மாணவர்களிடம் பேருந்து மீது ஏறி ராகுல் உரையாற்றினார். அப்போது, "நான் உங்கள் பல்கலைக்கழகத்திற்கு வந்து உங்களிடம் உரையாற்ற விரும்பினேன், நீங்கள் சொல்வதை கேட்ட விரும்பினேன். ஆனால் என்ன நடந்தது என்றால், இந்திய உள்துறை அமைச்சர் அசாம் முதலமைச்சரை அழைத்து பேசியுள்ளார். அசாம்  முதல்வர் அலுவலகம் பல்கலைக்கழகத்தின் தலைமையை அழைத்து, ராகுல் காந்தி இந்தப் பல்கலைக்கழக மாணவர்களுடன் பேச அனுமதிக்கக் கூடாது என்று கூறியுள்ளது என்று மாணவர்களிடம் கூறினார்.  

முன்னதாக திங்கட்கிழமை அசாமின் நாகோனில் உள்ள படத்ராவா கோயிலுக்கு ராகுல் காந்தி செல்ல முயன்ற போதும் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


source https://tamil.indianexpress.com/india/fir-against-rahul-gandhi-congress-yatra-clash-in-guwahati-2398576