29 01 2024
மாண்டியா மாவட்டத்தில் உள்ள கெரகோடு கிராமத்தில் காவி கொடியை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.க.,வின் கர்நாடக பிரிவு பாதயாத்திரை அறிவித்துள்ளது. இந்த போராட்டத்திற்கு மதச்சார்பற்ற ஜனதா தளமும் ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.
இதற்கிடையில், பா.ஜ.க மற்றும் சங்பரிவார்களின் திட்டமிடப்பட்ட செயலின் விளைவுதான் இந்த பிரச்சனை என்று முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டினார்.
கெரகோடு கிராம பஞ்சாயத்து வழங்கிய அனுமதி கடிதத்தை ட்வீட் செய்த முதல்வர் சித்தராமையா, "விதிகளை மீறி தேசியக் கொடிக்கான கம்பத்தில் அனுமன் கொடியை ஏற்றி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது தற்செயல் நிகழ்வு அல்ல" என்று ட்வீட் செய்துள்ளார்.
ஜனவரி 18ஆம் தேதியிட்ட அனுமதி கடிதத்தில், தேசியக் கொடி மற்றும் மாநிலக் கொடியை மட்டுமே கம்பத்தில் ஏற்றலாம் என்றும், மத, அரசியல் கொடியை அனுமதிக்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில், மாண்டியாவில் வகுப்புவாத கலவரத்தை ஏற்படுத்த பா.ஜ.க தலைவர்கள் சதித்திட்டம் தீட்டியுள்ளனர் என்பதில் சந்தேகம் இல்லை என சித்தராமையா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை கிராமத்திற்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோக், இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க போராட்டத்தை தீவிரப்படுத்தும் என்றார். ”பாதயாத்திரை நடத்தி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம். தத்தா பீடம் போராட்டம் எந்த வழியில் நடந்ததோ, அதே வழியில் அதை முன்னெடுப்போம்,” என்றும் அசோக் கூறினார். தத்தா பீடம் என்பது சிக்கமகளூருவில் உள்ள ஒரு கோவிலைக் குறிக்கிறது, இது 90 களில் ஒரு வகுப்புவாத கலவரத்தைத் தொடர்ந்து சர்ச்சையின் மையமாக மாறியது.
கொடியை அகற்றும் போது பக்தர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட காரசாரமான வார்த்தைப் பரிமாற்றத்தைத் தொடர்ந்து போலீஸார் அவர்களைத் தாக்கியதாக அசோக் குற்றம் சாட்டினார். இச்சம்பவத்திற்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றும், ஜே.டி.எஸ் உடன் இணைந்து போராட்டத்தை முன்னெடுப்போம் என்றும் அசோக் கூறினார்.
source https://tamil.indianexpress.com/india/saffron-flag-removed-in-mandya-bjp-to-intensify-protest-conspiracy-to-create-communal-tensions-says-karnataka-cm-siddaramaiah-2405503