திங்கள், 22 ஜனவரி, 2024

Income tax, CBI, ED ஆகிய 3 துறைக்கும் பயப்படுகிறவர்கள் தமிழ்நாட்டில் இல்லை – கனிமொழி எம்.பி. பேச்சு!

 

Income tax, CBI, ED ஆகிய 3 துறைக்கும் பயப்படுகிறவர்கள் தமிழ்நாட்டில் இல்லை, மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சியை மாற்றிக் காட்டுவோம் என திமுக இளைஞரணி மாநாட்டில் துணைப்பொது செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநாடு இன்று தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. திமுக இளைஞரணி மாநாட்டை கொடி ஏற்றி தொடங்கி வைத்தார். இம்மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். மாநாட்டு திடலுக்கு வருகை புரிந்த முதலமைச்சர் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மாநாட்டில், திமுக இளைஞரணியின் செயலாளரும், தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தீர்மானங்களை வாசித்தார். இந்த மாநாட்டிற்காக சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெத்தநாயக்கன்பாளையம் அருகில் சுமார் 2 லட்சம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் திமுகவின் முன்னணி மற்றும் முக்கிய நிர்வாகிகள் உரையாற்றினர்.

இந்த மாநாட்டில் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி

“இங்கு பேசியவர்கள் ‘நாம் பெரியாரின் பிள்ளைகள். அதனால் கொள்கைகள் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்’ என சொன்னார்கள். ஆனால் நாளை வட இந்தியாவில் ஒரு கோயிலை திறக்க இருக்கிறார்கள். அந்த கோயில் திறப்பு பற்றி நான் எதுவும் சொல்லப்போவதில்லை. ஏனென்றால், குடியரசுத்தலைவரை அழைக்கவில்லை என கேட்கப் போவதில்லை. நாளை பிரதமர் கோயிலை திறக்க இருப்பது பற்றியும் எந்த பிரச்னையும் இல்லை. 

எனக்கு கோயிலைப் பற்றி பெரிதாக தெரியாத நிலையில் இங்கு அமர்ந்திருக்கும் அறநிலையத்துறை அமைச்சரிடம் கேட்கிறேன். முழுதாக கட்டி முடிக்காமல் கோயிலை திறக்கலாமா? ஆனால் இன்றைக்கு இருக்கும் பாஜக அரசு, ‘நாங்கள் இந்து மதம், சனாதனம், கோயில் எல்லாம் காப்பாற்றுகிறோம். அதனால் எல்லா கோயில்களையும் எங்களிடம் கொடுத்து விடுங்கள்’ என சொல்கிறார்கள். அண்ணி (துர்கா ஸ்டாலின்) கூட இருக்காங்க. அவர்களுக்கும் கஷ்டமா தான் இருக்கும். ஏனென்றால் கட்டி முடிக்காத கோயிலை திறக்கக்கூடாது என்கிறது இந்து மதம். அதை அரசியலாக்கி, உங்கள் அரசியல் லாபத்திற்காக, இந்துக்களின் உணர்வுகளை மதிக்காமல், உங்கள் ஆட்களே கோயிலுக்கு வரமாட்டேன் என சொல்லக்கூடிய அளவுக்கு அரசியல் விளையாட்டில் நாளை அந்த கோயிலை திறக்க போகிறார்கள். இதற்கு அரை நாள் விடுமுறை வேறு விடப்பட்டுள்ளது.

தனியார் அமைப்பு திறக்கக்கூடிய கோயிலுக்கு ஸ்பெஷல் ரயில்கள் எல்லாம் விடுகிறார்கள். இதையெல்லாம் நாம் கேள்வி கேட்கக்கூடாது. கேள்விக் கேட்டால் நமக்கு ICE வைப்பார்கள். ICE என்றால் Income tax, CBI, ED ஆகிய 3 துறையும் நம்மை தேடி வரும். இதற்கெல்லாம் பயப்படுகிறவர்கள் தமிழ்நாட்டில் இல்லை. நீங்கள் என்ன செய்தாலும் உங்களையும், உங்கள் கருத்துகளையும் எதிர்ப்போம். எதிர்த்து நின்று மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சியை மாற்றிக் காட்டுவோம்” என தெரிவித்துள்ளார். 


source https://news7tamil.live/there-are-no-people-in-tamil-nadu-who-are-afraid-of-income-tax-cbi-ed-mp-kanimozhi-speech.html