புதன், 20 மார்ச், 2024

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை; 5 ’நியாய’ பிரிவுகளில் 25 உத்தரவாதங்கள்!

 நாடு மாற்றத்தை நாடுகிறது என்று கூறிய காங்கிரஸ், செவ்வாயன்று கட்சியின் மக்களவைத் தேர்தல் அறிக்கையானது ஐந்து "நியாய தூண்களின்" அடிப்படையில் மக்களுக்கு நீதியை உறுதி செய்வதில் கவனம் செலுத்தும் என்றும், 2004 இன் ‘இந்தியா ஒளிர்கிறது’ முழக்கத்தின் அதே விதியை பா.ஜ.க.,வின் ‘உத்தரவாதம்’ சந்திக்கும் என்று கூறியது.

கட்சியின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான காங்கிரஸ் காரியக் கமிட்டி (CWC), கட்சியின் தேர்தல் அறிக்கையை மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விவாதித்து, இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பின்தங்கிய பிரிவினர்களுக்கான ஐந்து "நியாய" உத்தரவாதங்கள் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றடைய முடிவு செய்தது. 

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வாக்குறுதியும், அரசியலமைப்பு நிறுவனங்களின் சுதந்திரத்தை உறுதி செய்வதற்கும், ஏஜென்சிகளை "தவறாகப் பயன்படுத்துவதை" நிறுத்துவதற்கும் ஒரு சட்டமும் இந்த தேர்தல் அறிக்கையில் உள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த 5 உத்தரவாதங்களும் இந்த தேர்தலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என அக்கட்சியின் தலைவர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலுக்கு காங்கிரஸ் முழுமையாக தயாராகிவிட்டதாகவும், அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் அதன் உத்தரவாதத்தை எடுத்துச் செல்லும் வகையில் மிகப்பெரிய பிரச்சாரத்தை தொடங்கும் என்றும் வேணுகோபால் கூறினார்.

பா.ஜ.க.,வின் "உத்தரவாதம்" "ஜூம்லாக்கள்" (சொல்லாட்சி) மற்றும் "பொய்களின் கூட்டம்" என்று வேணுகோபால் கேலி செய்தார். ஐந்து நியாயங்களான (நீதிகள்) 'பாகிதாரி நியாய்', 'கிசான் நியாய்', 'நாரி நியாய்', 'ஷ்ராமிக் நியாய்' மற்றும் 'யுவ நியாய்' ஆகிய 5 பிரிவுகளில் தலா ஐந்து உத்தரவாதங்கள் என 25 உத்தரவாதங்களை அக்கட்சி தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் ராகுல் காந்தி அறிவித்துள்ளனர்.


source https://tamil.indianexpress.com/india/congress-manifesto-with-5-nyay-25-guarantees-congress-says-fully-prepared-4372770