புதன், 10 ஜூலை, 2024

உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழப்பு!

 

உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதில் குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர். 

கடந்த 2022ஆம் ஆண்டு ரஷ்யா – உக்ரைன் இடையே தொடங்கிய போர் மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இந்த போரில் உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல்வேறு முக்கிய நகரங்கள் சின்னாபின்னமாகி விட்டன. இந்நிலையில் நேற்று உக்ரைனின் பல நகரங்களை குறிவைத்து ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் மருத்துவமனை, அடுக்குமாடி குடியிருப்புகள், பொதுக் கட்டமைப்புகள் என பல சேதமடைந்துள்ளன.

இதில் குழந்தைகள் மருத்துவமனை பலத்த சேதமடைந்ததால் 3 குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மொத்தமாக இந்த தாக்குதலில் 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 170க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, குழந்தைகள் மருத்துவமனை, மகப்பேறு மையம், வீடுகள், வணிக வளாகம் என 100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. ரஷ்ய பயங்கரவாதிகள் இதற்கு பதிலளிக்க வேண்டும். எங்கள் தரப்பில் ரஷ்யாவிற்கு நாங்கள் சரியான பதிலடி வழங்குவோம் என தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த தாக்குதல் மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்று என உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையே போர் தொடங்கியபின் மோடி ரஷ்யா செல்வது இதுவே முதல் முறையாகும். எனவே மோடியின் இந்த பயணம் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏற்கனவே பல முறை புதினுடன் பேசியுள்ள மோடி, இந்த யுகம் போருக்கானது இல்லை என்று வலியுறுத்தியிருந்தார்.

source https://news7tamil.live/russia-launched-a-missile-attack-on-ukraine-41-people-including-children-were-killed.html