செவ்வாய், 9 ஜூலை, 2024

வீணாகும் அரசின் பலகோடி நிதி: முதல்வர் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்; பி.ஆர் பாண்டியன்

 Pr Pandian MS

திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் விரோத கொள்கையை கையாளும் மாவட்ட ஆட்சியரை கண்டித்தும்,வளர்ச்சிப் பணிகள் முடக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாவட்டத் தலைவர் எம் சுப்பையன் தலைமையில் நடைபெற்றது.

போராட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றிய  பி ஆர்.பாண்டியன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் விளைநிலங்கள் ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றப்பட்டு வருவது வேதனை அளிக்கிறது. அரசு அலுவலகங்களில் லஞ்ச,ஊழல் முறைகேடுகள் தீவிரமடைந்துள்ளது. விளைநிலங்கள் விவசாயிகள் ஒப்புதல் இன்றி அபகரித்து சுயநலத்திற்காக ஆளுங்கட்சியின் குடவாசல் ஒன்றிய செயலாளர் பிரபாகர் சாலை அமைத்து வருகிறார்.

அடியாட்கள் துணையோடு மிரட்டப்படுகிறார்கள். அரசின் நிதி பல கோடி வீணடிக்கப்பட்டுள்ளது.முதலமைச்சர் இதனை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் விவசாயிகள் குறை தீர்கூட்டத்தை சடங்கு கூட்டமாக நடத்தி வருகிறார். விவசாயிகள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு தீர்வு காண முன்வரவில்லை. விவசாயிகளை சந்தித்து பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் ஒட்டுமொத்தமாக முடங்கி உள்ளது.

பேரழிவு காலங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பயிர்களை  பார்வையிட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பும் நடைமுறையை பின்பற்றவில்லை. தற்போது கோடையில் பயிரிடப்பட்ட பருத்தி எள் உள்ளிட்ட பல்வேறு கோடைகாலப் பயிர்கள் அழிந்து உள்ளது. அவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்புவதற்கு முன்வரவில்லை. வறட்சி காலங்களில் விவசாய விளைநிலங்கள் கருகிய போது நேரில் பார்வையிட்டு அரசுக்கு உண்மை நிலையை எடுத்துரைத்த நிவாரணம் பெற்று தரவில்லை. நேரடி நெல் கொள்முதல் செய்வதில் ஏற்படும் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்ப்பதற்கு கள ஆய்வு மேற்கொள்ளவில்லை.

வளர்ச்சிப் பணிகளை உரிய காலத்தில் முடிப்பதற்கான கள ஆய்வுகள் மேற்கொள்வது கிடையாது. மக்களுக்கு தொடர்புடைய அலுவலக நிர்வாகங்கள் உரிய முறையில் கண்காணிக்கப்படவில்லை.ஒட்டுமொத்தமாக திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்து விவசாயிகளோடு கலந்துரையாடும் கூட்டங்கள் நடத்தப்படுவது கைவிடப்பட்டுள்ளது.பெரியகுடி பேரழிவு ஏற்படுத்த ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிணறு நிரந்தரமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆறு மாதங்கள் கடந்த நிலையில் இதுவரையிலும் மூடுவதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை

இவ்வாறாக ஒட்டுமொத்தமாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் செயல்பாடுகள் விவசாயிகளுக்கு விரோதமானதாகவும் அலட்சியப்படுத்தும் வகையில் தொடர்கிறது. இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.  முதலமைச்சர்  சொந்த மாவட்டமான திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்பட வேண்டிய உயிர் காக்கும் அவசர சால உயர்சிகிச்சை பிரிவுக்கான மூளை நரம்பியல்.இதயம் சிறுநீரகம் உள்ளிட்ட சிறப்பு மருத்துவர் நியமிக்கப்படவில்லை.

இதனால் மாவட்டம் முழுமையிலும் தலை காயம் ஏற்படுபவர்களும்மாரடைப்பு ஏற்படும் நோயாளிகள் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு சாகடிக்கப்படும் நிலை தொடர்வது வேதனை அளிக்கிறது. உடனடியாக மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தேவையான சிறப்பு மருத்துவர்கள் நியமனம் செய்து 24 மணி நேரமும் உயிர் காக்கும் உயர் சிகிச்சை மையம் செயல்படுவதை உத்திரவாதப்படுத்த வேண்டும்.

நோயாளிகள் பாதிப்புகளின் தன்மைக்கு ஏற்ப மாவட்ட தாலுக்கா மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்படும் நோயாளிகளை தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு அனுமதிக்க வேண்டும்.108 ஆம்புலன்ஸ் சேவையை தேவையான மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதற்கு அனுமதிக்க வேண்டும். மாறாக மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தான் கொண்டு செல்ல வேண்டும் என்று கட்டாயப்படுத்தி காலதாமதப்படுத்தி உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்த்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில்அமைப்பு செயலாளர் எஸ் ஸ்ரீதர்,மாநிலத் தலைவர் திருப்பதிவாண்டையார். துணைத் தலைவர் பயரி கிருஷ்ணமணிமாவட்ட செயலாளர் குடவாசல் சரவணன்,கௌரவத் தலைவர் எம் செல்வராஜ்மாநில துணைச் செயலாளர் எம். செந்தில்குமார், மாநில இளைஞரணி செயலாளர் ஒக்கநாடு மகேஸ்வரன்மாவட்ட துணை செயலாளர் பொ.முகேஷ்.உயர்மட்ட குழு உறுப்பினர்கள் குடவாசல் அசோகன் செல்வராஜ். திருவாரூர் ஒன்றிய செயலாளர் அகஸ்டின்ஒன்றிய செயலாளர்கள் கோட்டூர் தெற்கு தெய்வமணிகுடவாசல் நாகராஜ்முத்துப்பேட்டை சரவணன் வலங்கைமான் ஆனந்த் கோட்டூர் வடக்கு ராவணன் எஸ் வி கே சேகர்,வீராணம் பிரபு கச்சனம் ரவி தவமணி,வடுவூர் செல்வதுரைநானலூர் செந்தில்குமார், மாங்குடி வெற்றி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

க.சண்முகவடிவேல்


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-farmers-association-head-pr-pandian-press-meet-in-around-tiruvarur-5551317