புதன், 16 அக்டோபர், 2024

வயநாட்டில் களமிறங்கும் பிரியங்கா காந்தி... காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 

Priyanka Gandhi electoral debu Wayanad Lok Sabha seat Tamil News

வயநாடு மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய தொகுதிகளில் களமாடினார். அவர் இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்றார். ஒருவர் 2 தொகுதிகளில் எம்.பி பதவி வகிக்க முடியாது என்பதால், ராகுல் காந்தி தனது வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். அவர் தற்போது ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி எம்.பி-யாக நீடிக்கிறார். மேலும், எதிர்க்கட்சி தலைவராகவும் உள்ளார். 

15 10 2024 

இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியுடன் நாட்டில் காலியாக உள்ள மற்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியையும் இன்று செவ்வாய்கிழமை அறிவித்தது. அதன்படி, கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதிக்கும், 14 மாநிலங்களில் உள்ள 47 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நவம்பர் 13 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. 

மேலும், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் சட்டமன்ற தொகுதிக்கும், மகாராஷ்டிராவில் உள்ள நான்டெட் மக்களவைத் தொகுதிக்கும் நவம்பர் 20 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்றும், முடிவுகள் நவம்பர் 23 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தது. 

இதேபோல், 'கேரளாவில் உள்ள வயநாடு மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நவம்பர் 13-ம் தேதி நடைபெறும். இந்தத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் வரும் 18 ஆம் தேதி தொடங்குகிறது. வரும் 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்கள் வரும் 28 ஆம் தேதி பரிசீலிக்கப்படும். நவம்பர் 13 ஆம் தேதி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 23 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்பட உள்ளது' என்று தெரிவித்தது. 

இந்த நிலையில், வயநாடு மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில்  காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ளார். 

52 வயதான பிரியங்கா காந்தி, 2004 மக்களவை தேர்தலின் போது அவரது தாயார் சோனியா காந்திக்காக பிரச்சாரம் செய்ய அரசியல் களத்துக்குள் நுழைந்தார். இதன் பிறகு, ராகுல் காந்திக்காக பிரச்சாரம் செய்ய களம் புகுந்தார். தற்போது அவர் முதன்முறையாக வாக்கு அரசியலுக்குள் நுழையவிருக்கிறார். 

இதனிடையே, காலியாக உள்ள பாலக்காடு சட்டப்பேரவை தொகுதியில் ராகுல் மம்கூடத்தில் மற்றும் தனிதொகுதியான செலக்கரா தொகுதியில் ரம்யா ஹரிதாஸூம் போட்டியிடுவார்கள் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.


source https://tamil.indianexpress.com/india/priyanka-gandhi-electoral-debu-wayanad-lok-sabha-seat-tamil-news-7317527

Related Posts: