சிலர் காங்கிரஸ் இல்லாத பாரதத்தை உருவாக்குவோம் என சொல்லி வருவதாகவும், ஆனால், விரைவில் ஆர்எஸ்எஸ் பாஜக இல்லாத இந்தியா என்ற நிலை உருவாகும் என கனிமொழி எம்.பி பேசினார்.
source https://news7tamil.live/congressmeet-soon-there-will-be-a-bharat-without-rss-and-bjp-kanimozhi-mp-speech.html
ஆர்எஸ்எஸ், பாஜகவின் வெறுப்பு அரசியலை எதிர்த்து இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற கண்டன கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
இந்த கூட்டத்தில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, கே.வி.தங்கபாலு, ஈவிகேஎஸ். இளங்கோவன் எம்எல்ஏ, கிருஷ்ணசாமி மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில அணிகளின் தலைவர்கள், மாநில நிர்வாகிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேடையில் கனிமொழி எம்.பி பேசியதாவது:
“பாஜக, ஆர்எஸ்எஸ் என்பது ஒவ்வொரு நாளும் வெறுப்பு அரசியலின் விதைகளை விதைத்து கொண்டிருக்கும் ஒரு இயக்கம். ஒவ்வொரு நாளும் அந்த விதைகளை வேரோடு அறுத்துக் கொண்டிருந்தால் தான் நாட்டை காப்பாற்ற முடியும். பாஜகவினர் வெறுப்பு அரசியலை பரப்புபவர்கள். இங்கு இருக்கும் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பெரியார் வழியில் மனிதநேயத்தை கொண்டிருப்பவர்கள். பொய்யால் ஏற்படும் அரசியல் ஆதாயத்தை சுற்றி மட்டுமே பாஜகவின் அரசியல் அமைந்திருக்கிறது.
மாட்டுக்கறியை மையப்படுத்தி எத்தனை நாடகங்களை நிகழ்த்தி இருக்கிறீர்கள். இதன் மூலம் எத்தனை கலவரங்கள், எத்தனை நபர்களை கொன்று இருப்பீர்கள். இந்தியாவிலேயே அதிக அளவில் மாட்டுக்கறி ஏற்றுமதி செய்யப்படும் முதல் இரண்டு மாநிலங்கள் உத்தர பிரதேசம், குஜராத். எதன் மூலம் மக்களை பிளவுபடுத்துகிறீர்களோ, அதன் மீது உங்களுக்கு துளி அளவு அக்கறை இல்லை.
நாட்டில் பெரும்பான்மை இந்துக்களுக்கு என்ன செய்திருக்கிறீர்கள். பெண்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு இருக்கிறதா? அவர்களுக்கான இடஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளதா? இல்லை. நாட்டில் உள்ள பெரும்பான்மை இந்துக்களை ஏமாற்றுவதற்கு எடுக்கும் ஆயுதம் தான்
மதம். கல்வியில் உங்களுக்கு வழிகாட்டக்கூடிய மாநிலம் தமிழ்நாடு. அடுத்த 30 ஆண்டுகளில் நீங்கள் எட்ட நினைக்கும் இலக்கை ஏற்கனவே எட்டி நிற்கிறது தமிழ்நாடு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போன்ற தலைவர்களுக்கு அக்கறை இருப்பதால் தான் தொடர்ந்து பாஜக, ஆர்எஸ்எஸ்-ஐ எதிர்த்து வருகிறோம்.
ராகுல் காந்திக்கு எதிராக வெறுப்பு அரசியல் பரப்பி வருகிறார்கள். ஆனால் அவருடைய அரசியல் “அன்பின் அரசியல்”. அன்பின் அரசியலுக்கு முன்னால் அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. இதுதான் ராகுல் காந்தி மீது அவர்களுக்கு இருக்கக்கூடிய வெறுப்பு அரசியல். நம்மை பார்த்து மிரண்டு போயிருக்க கூடியவர்களை, வாஞ்சையாக அவர்களோடு இணைந்து அரசியலை முன்னெடுக்க நினைப்பவர் ராகுல் காந்தி .
அனுராக்கை பொறுத்தவரை சாதி என்பது தெரியாமல் இருந்தால் அது இழுக்கு. ஆனால் ராகுல்காந்தி அதற்கு ஜாதி என்பது எனக்கு இல்லை என பதில் சொன்னார். இதுதான் நம்மை இணைத்து வைத்திருக்க கூடிய கயிறு. இந்திய அரசியலமைப்புச் சட்ட புத்தகத்தை கையில் வைத்து பதவி ஏற்க வேண்டிய சூழலை பாஜக அரசு உருவாக்கியுள்ளது. நாட்டை ஆளக்கூடியவர்களிடம் இருந்து அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
மனிதனை நேசிக்க தெரிந்த தலைவன் ராகுல் காந்தி. மிரட்டல், உருட்டல் எல்லாம் காங்கிரஸ் கட்சியினர், ராகுல் காந்தி, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வழியில் வந்த முதலமைச்சர், திமுகவினர், இந்திய கூட்டணி கட்சியினர் ஆகியோரிடம் வேலைக்கு ஆகாது. காங்கிரஸ் இல்லாத பாரதத்தை உருவாக்குவோம் என சொல்லி வருகிறார்கள். விரைவில் ஆர்எஸ்எஸ் பாஜக இல்லாத இந்தியா என்ற நிலை உருவாகும்” இவ்வாறு தெரிவித்தார்.