திங்கள், 14 அக்டோபர், 2024

“கொலைகாரர்களுக்கு ஜாமீன்.. இது அருவருப்பானது..” – #PrakashRaj கண்டனம்!

 

பிரதமர் மோடி மற்றும் பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளை கடுமையாக விமர்சித்து வந்த பெங்களூருவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கடந்த 2017-ம் ஆண்டு 4 மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மொத்தம் 18 பேரில், தற்போது 16 குற்றவாளிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பரசுராம் வாக்மோர் மற்றும் மனோஹர் யாதவே ஆகிய இருவருக்கும் சில ஹிந்துத்துவ அமைப்புகள் உற்சாக வரவேற்பு அளித்துள்ள சம்பவம் சமூகத்தில் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரகாஷ் ராஜ் ட்விட்டர் (எக்ஸ்) தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”இந்த நாட்டில் கொலைகாரர்கள் மற்றும் கற்பழிப்பாளர்களுக்கு மட்டுமே ஜாமீன் என்பது விதி. இது அருவருப்பானது” எனப் பதிவிட்டு கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் மற்றொரு பதிவில், “மறைந்த பாதிரியார் ஸ்டான் சுவாமி மற்றும் சாய் பாபா ஆகியோர் சிறையிலடைக்கப்பட்டு நிர்வாக ரீதியாக சாகடிக்கப்பட்டுள்ளனர். இவற்றையெல்லாம் நாம் பார்வையாளர்களாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இன்னும் எத்தனை பேர் கொல்லப்படுவதை நாம் பார்த்துக்கொண்டே இருக்கப் போகிறோம்? உமர் காலித்தையும் அரசியல் கைதிகளாக சிறையிலடைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்க, என்னுடன் இணைந்து குரல் கொடுக்கவும்” இவ்வாறு பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.


source https://news7tamil.live/bail-for-murderers-this-is-disgusting-prakashraj-condemned.html