அக்னிபாத் திட்டம் என்பது ராணுவத்துக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்தில் இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் ஒப்பந்தத்தில் பணியாற்றும் திட்டம் தான் அக்னிபாத். இத்திட்டத்தில் பணியாற்றும் வீரர்கள் அக்னிவீர் என்று அழைக்கப்படுகின்றனர். இத்திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு 6 மாத காலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இந்த சூழலில், மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில், கடந்த 10ம் தேதி பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. இதில் 20 வயதான கோஹில் விஸ்வராஜ் மற்றும் 21 வயதான சயீஃபாத் ஆகிய 2 வீரர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த நிலையில், இச்சம்பவத்திற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில், “வீரர்கள் உயிரிழந்த சம்பவம் அக்னிவீர் திட்டம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது. ஆனால் பாஜக அரசு இவற்றுக்கான விடையளிப்பதில் தோல்வியடைந்துள்ளது. மறைந்த கோஹில் மற்றும் சைஃபத் ஷித் குடும்பங்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படுமா? அதிலும், ராணுவத்தில் சேவையாற்றி வீரமரணமடையும் வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படுவதை போலவே இவர்களுக்கும் சரிசமமான இழப்பீடு வழங்கப்படுமா? அக்னிவீர் திட்டத்தில் சேர்ந்துள்ள வீரர்களின் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் உள்பட அரசு சலுகைகள் ஏன் கிடைப்பதில்லை?
உயிரிழந்த இந்த இவ்விரு வீரர்களின் கடமையும் தியாகமும் பிற வீரர்களின் தியாகத்துக்கு ஒப்பானது, அப்படியிருக்கும்போது, இத்தகைய பாகுபாடு ஏன் காட்டப்படுகிறது? அக்னிபாத் திட்டம் என்பது ராணுவத்துக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி, வீரமரணமடைந்த வீரர்களை அவமதிக்கும் நடைமுறை. இந்த நிலையில், ஒரு வீரரின் உயிர் இன்னொரு வீரரைவிட மதிப்புமிக்கதாகக் கருதப்படுவது ஏன்? என்பதற்கு பிரதமரும் பாதுகாப்புத் துறை அமைச்சரும் பதிலளிக்க வேண்டும். இந்த அநீதிக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து நிற்போம்.”
இவ்வாறு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.
source https://news7tamil.live/the-agnipat-plan-is-an-injustice-to-the-army-rahulgandhi.html