/indian-express-tamil/media/media_files/2024/12/02/KyD18Aycq09b6XK34qdI.jpg)
வங்கக்கடலில் உருவான ஃபீஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் கனமழை பெய்து வரும் நிலையில், திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தற்போது சம்பவம் நடந்த இடத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்துள்ளார்.
வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் ஃபீஞ்சல் புயலாக உருவெடுத்தால், தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக இடைவிடாமல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக விழுப்பும், புதுச்சேரி, கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ததால், ஆறு, ஏரிகள், குளம் என அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், திருவண்ணாமலையில் பெய்த கனமழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மலை அடிவராத்தில் இருக்கும் வஉசி நகர் 9-வது தெருவில் உள்ள குடியிருப்பபுகள் இந்த மண் சரிவில் சிக்கியுள்ளன. இந்த மண்சரிவில் சிக்கி ஒருவர் தனது வீட்டுடன் புதைந்த நிலையில், 2 குடும்பத்தினர் எச்சரிக்கையாக வெளியில் வந்ததால், மண் சரிவில் சிக்காமல் தப்பித்துள்ளனர்.
தற்போது மீட்பு படையினர் மண் சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இதுவரை இந்த மண்சரிவில் சிக்கி 7 பேர் பலியானதாக அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மண்சரிவு சம்பவம் ஏற்பட்ட இடத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்துள்ளார்.
அப்போது பேசிய அவர், வஉசி நகர் மக்கள் வெளியில்வர தயார் என்றால், அவர்களுக்கு மாற்று இடம் கொடுக்க அரசு தயாராக உள்ளது. மக்கள் வெளியில் வந்தால் அவர்களுக்கென்று தனி திட்டம் போடப்படும். இந்த மண்சரிவு தொடர்பாக ஐஐடிக்கு மண் பரிசோதனை தர அறிவுறுத்தியுள்ளோம். திருவண்ணாமலையில் உண்மையாகவே துயர சம்பவம் நடந்துள்ளது. எப்படியாவது நல்ல செய்தி வரும் என்று எதிபார்த்தோம் என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த மண் சரிவு சம்பவத்தில் உயிரிழந்த 7 பேரின் உறவினர்களுக்கு எங்களின் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறோம். அனைவரின் குடும்பத்திற்கும் ரூ5 லட்சம் நிதியுதவி அளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நாளைக்குள் அந்த நிவாரண தொகையை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தியுள்ளோம். இங்கு பாதுகாப்பற்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள், அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ள முகாம்களுக்கும், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும், அரசின் நடவடிககைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-deputy-cm-udhayanithi-stalin-inspection-in-tiruvannamalai-rescue-area-7680532