சனி, 7 டிசம்பர், 2024

ஃபீஞ்சல் புயல் பாதிப்பு: நிவாரண நிதியாக ரூ944.80 கோடி ஒதுக்கியது மத்திய அரசு!

 Stalin Modi Meeting

ஃபீஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டுக்கு நாட்டுக்கு மத்திய அரசின் சார்பில் ரூ.944.80 கோடி நிவாரண நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிதியை மத்திய உள்துறை அமைச்சகம் உடனடியாக விடுவித்துள்ளது,

தமிழகத்தில் ஃபீஞ்சல் புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், புயல் கரையை கடந்த நிலையிலும் பல்வேறு பகுதிகளில் அதிகனமழை பெய்தது. குறிப்பாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி  மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதில் விழுப்புரத்தில் வரலாறு காணாத மழை பெய்தது. 50 செ.மீ அளவு மழை பதிவானது.

கனமழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் தங்களை உடமைகளை இழந்து பெரும் சேதம் ஏற்பட்டது. மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 நிவாரணம் வழங்கப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் பாதிப்பை கருத்தில்கொண்டு தேசிய பேரிடர் நிதியில் இருந்து நிவாரண நிதி வழங்குமாறு பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அதனைத் தொடர்ந்து ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட சென்னை வந்த மத்தியக் குழு அதிகாரிகளிடம் தமிழகத்திற்கு அதிகபட்ச நிதியை பெற்று கொடுங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். 

 இந்நிலையில், ஃபீஞ்சல் புயல் பாதிப்பு சீரமைப்புப் பணிக்காக, முதற்கட்டமாக ரூ.2,000 கோடி நிவாரண நிதியாக வழங்க என்று முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது தமிழகத்திற்கு ரூ.944.80 கோடி நிவாரண நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை மத்திய உள்துறை அமைச்சகம் உடனடியாக விடுவித்துள்ளது.



source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-storm-relief-fund-central-government-allotted-944-corors-7781436