ஃபீஞ்சல் புயல் தாக்கத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்ததைத் தொடர்ந்து, துணை முதலமைச்சர் விழுப்புரத்திற்கு நேரில் சென்று மூத்த அமைச்சர்களுடன் ஆய்வு செய்தார். மேலும், தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
வங்கக் கடலில் உருவான ஃபீஞ்சல் புயல் சனிக்கிழமை (நவம்பர் 30) நள்ளிரவு புதுச்சேரி - மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. புயல் கரையை கடந்த பின்னரும், புயலின் தாக்கத்தால் புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. புதுச்சேரியில் 48 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
இதனால், விழுப்புரம் மாவட்டத்தில், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. பல்வேறு இடங்களில் மழை நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவதி அடைந்துள்ளனர். மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், ஃபீஞ்சல் புயல் தாக்கத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்ததைத் தொடர்ந்து, துணை முதலமைச்சர் விழுப்புரத்திற்கு நேரில் சென்று மூத்த அமைச்சர்களுடன் ஆய்வு செய்தார். மேலும், தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். மேலும், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாதது போல மழை வரலாறு காணாத மழை மாதிரி பெய்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
“விழுப்புரத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்னும் மழை நிற்கவில்லை. நானும் மூத்த அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகிறோம். தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கண்டிப்பாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறினார்.
கோட்டக்குப்பம் பகுதியில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்களை பத்திரமாக மீட்டு, அரசுத்தரப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் உள்ள பொதுமக்களை துணை முதலமைச்சர் உதயநிதி நேரில் சந்தித்து அரிசி - போர்வை - பிரட் உள்ளிட்ட பொருட்களுடன் கூடிய நிவாரணத் தொகுப்பை வழங்கினார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: விழுப்புரத்தில் மழை இன்னும் விடவே இல்ல.. மழை சுத்தமாக விடவே இல்லை. இப்போது கூட பெய்துகொண்டே தான் இருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாதது போல மழை வரலாறு காணாத மழை மாதிரி பெய்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, நானும் மூத்த அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகிறோம். பொன்முடி, சிவசங்கர், செந்தில் பாலாஜி, மாநகராட்சி ஆணையர்கள் வந்திருக்கிறோம்.
இங்குள்ள பேருந்து நிலையமானது சின்ன மழைக்கே தண்ணீர் தேங்கும். ஆனால், இப்போ மிகப்பெரிய மழை பெய்திருக்கும். சுமார் 60 செமீ மழை பெய்து இருக்கும். இன்னும் பெய்து கொண்டே தான் இருக்கிறது. தேங்கியுள்ள தண்ணீரை மோட்டார் பம்ப் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. மழை பெய்வது நின்றால் தான் முழுமையாக தண்ணீரை வெளியேற்ற முடியும். இந்த பேருந்து நிலையத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி நாங்கள் கடலூர் மாவட்டத்திற்கு ஆய்வு செய்ய போகிறோம். மழையால் பல்வேறு இடங்களில் நெற்பயிர்கள் சேதமடைந்ததால் கவலையில் உள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும். மழை நின்ற பிறகு 3 நாட்கள் கழித்து கள ஆய்வு செய்து நிவாரணம் வழங்கப்படும். கண்டிப்பாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுக்கப்படும்” என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/fengal-cyclone-heavy-rain-at-villupuram-udhayanidhi-stalin-inspection-and-compensation-to-farmers-7663944