தமிழகத்தில் புதிதாக அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய், கடந்த அக்டோபர் 27-ந் தேதி, தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்தி முடித்தார். இந்த மாநாட்டில், ஆளும் திமுக அரசு குறித்து வெளிப்படையாக விமர்சித்த விஜய், தற்போது நடந்த வெள்ள பாதிப்பு குறித்தும் அவ்வப்போது தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.
இதனிடையே கட்சி தொடங்கி தனது முதல் மாநாட்டில் பேசிய விஜய், முதல்முறையாக ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்கு உரையாற்ற உள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தொகுத்துள்ள ‘எல்லோருக்குமான தலைவர் – அம்பேத்கர்’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நாளை (டிசம்பர் 6) நடைபெற உள்ளது. இந்த விழாவில் விஜய் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பற்கேற்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் பங்கேற்ற மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது, இது குறித்து வி.சி.க துணைப்பொதுச்செயலாளர்களில் ஒருவரான வன்னி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாளை திசம்பர் 6 அன்று நடக்கவிருக்கும் ‘அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர்’ எனும் நூல் வெளியீட்டு விழாவில், திமுக கொடுத்த நெருக்கடியால்தான் எங்கள் தலைவர் போகவில்லை என உள்நோக்கம் கற்பிக்கிறார்கள். தமிழ்நாட்டில் சில ஊடக நிறுவனங்கள் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரை வைத்து அரசியல் செய்ய முயற்சிக்கின்றன. அம்பேத்கரின் கொள்கைகள் வெற்றி பெற வேண்டும் என்பதை விட, தங்களது அரசியல் சதி வெற்றி பெற வேண்டுமென அவர்கள் துடிக்கிறார்கள்.
அம்பேத்கர் குறித்த நூல் வெளியீட்டு விழாவுக்கு வரமாட்டேன் என திருமாவளவன் கூறவில்லை. புரட்சியாளர் அம்பேத்கர் குறித்த புரிதல் எதுவுமில்லாமல் அரசமைப்புச் சட்டத்தை ஒரு கையிலும் பகவத் கீதையை இன்னொரு கையிலும் வைத்துக்கொண்டு சமரச ‘பாயாசம்’ கிண்டுகிற ஒருவரோடு மேடையைப் பகிர்ந்துகொள்ள முடியாது என்றுதான் சொன்னார்.
ஆனால் நூல் வெளியீட்டாளர்கள் எமது தலைவரைப் புறக்கணித்துவிட்டுப் பாயாசம்தான் வேண்டும் எனப் போயிருக்கிறார்கள். அது அவர்கள் விருப்பம். ஆனால், எங்கள் தலைவர் நிகழ்ச்சியைப் புறக்கணித்துவிட்டார் என்ற பொய்ப் பிரச்சாரத்தை ஊக்குவிப்பது எமது தலைவரை அவமதிப்பது மட்டுமல்ல, புரட்சியாளர் அம்பேத்கரையும் அவமதிப்பதே ஆகும். நூல் வெளியீட்டாளர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், புரட்சியாளர் அம்பேத்கரும், எழுச்சித் தமிழரும் நெருப்பைப் போன்றவர்கள். அவர்களைப் பொட்டலம் கட்ட எவராலும் முடியாது என்று கூறியுள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-vck-vanni-arasu-said-about-thirumavalavan-in-ambedkar-function-7778857