சென்னை அருகே பல்லாவரத்தில், ஒரு பெண் உள்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்ததால் அதனை பயன்படுத்திய சுமார் 30 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், இந்தக் குற்றச்சாட்டை அரசு அதிகாரிகள் மறுத்துள்ளனர். ஆனால், உயிரிழந்தவர்களில் இருவரின் உடற்கூராய்வு முடிவுகளில் கடுமையான உணவு ஒவ்வாமை காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குடிநீர் கெட்டுப்போனதால் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
நேற்றைய தினம் (டிச 5) மோகன ரங்கன் மற்றும் திருவேதி ஆகிய இருவர் கடும் வயிற்று வலி, வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். அடுத்த சில மணி நேரங்களில் அதே பகுதியைச் சேர்ந்த வரலட்சுமி என்ற 88 வயது மூதாட்டியும் இதே பிரச்சனை காரணமாக உயிரிழந்தார்.
இதன் தொடர்ச்சியாக, அப்பகுதியைச் சேர்ந்த பலர் வயிற்று வலி, வாந்தியால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு, கடந்த 3 நாள்களாக பல்லாவரம் கண்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்த 34 பேர் புறநோயாளிகளாக வந்துள்ளனர். அவர்களில் 14 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையிலும், இருவர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகவலறிந்து, அமைச்சர் தா.மோ. அன்பரசன், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மற்றும் தாம்பரம் மாநகராட்சியின் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மேலும், சுகாதார துறை அதிகாரிகள் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் முகாமிட்டு மருந்துகள் வழங்கி வருவதாகவும், அப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்த தனியார் டேங்கர் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட இடங்களில் இருந்து குடிநீர் மாதிரிகள் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டுள்ளன. இதன் ஆய்வு முடிவுகள் மூன்று நாள்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/three-die-in-chennais-pallavaram-due-to-suspected-drinking-water-contamination-7779155