இந்த 3 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்": தேர்தல் அதிகாரி தகவல் 7 1 2025
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில், அரசு விடுமுறை நாட்களில் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியாது என மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமான நிலையில், அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வாக்குப்பதிவு பிப்ரவர் 5-ஆம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான மனு தாக்கல் ஜனவரி 10-ஆம் தேதி தொடங்கி, 17-ஆம் தேதி முடிவடைகிறது.
மேலும், வேட்புமனு பரீசிலனை ஜனவரி 18-ஆம் தேதியும், வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் ஜனவரி 20-ஆம் தேதியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்டார்.
இந்நிலையில், ஈரோடு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான ராஜகோபால் சுன்கரா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "அரசு விடுமுறை நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. அதன்படி, 10, 13 மற்றும் 17 ஆகிய தேதிகளில் வேட்புமனு தாக்கல் செய்யலாம். தேர்தல் தொடர்பான முறைகேடுகளில் யாராவது ஈடுபட்டால் போலீசார், பறக்கும் படையினர், கண்காணிப்பு குழுவினர் ஆகியோர் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள். தேர்தலை முன்னிட்டு சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உட்பட அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
கடந்த இடைத்தேர்தலில் 5 வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டனர். இந்த இடைத்தேர்தலில் தேவையான அளவு பாதுகாப்பு படையினர் குறித்து இனி தான் தகவல் அளிக்கவுள்ளோம். தேர்தல் நடத்தை விதிமுறைகள் வணிகர்கள் உள்ளிட்டோருக்கு அறிவுறுத்தப்படும். முறையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.