புதன், 8 ஜனவரி, 2025

இந்தோனேஷியா | அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் அறிமுகம்!

 7 1 25

இந்தோனேஷியாவில் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மதிய சத்துணவு வழங்கும் திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகம் செய்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் பல ஆண்டுகளாக மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு மதிய உணவு திட்டம் முக்கிய பங்காற்றி உள்ளது. மேலும் இது தவிர காலை உணவு திட்டம் முதல் பல்வேறு திட்டங்கள் மாணவர்களின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது தமிழ்நாட்டை போல் உலக நாடு ஒன்று அரசு பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேஷியாவில் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மதிய சத்துணவு திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகபடுத்தி உள்ளது. உலகிலேயே ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தோனேசியாவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் அந்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும், மதிய உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட பிரபுவோ சுபியான்தோ, ”இந்தோனேஷியாவில் உள்ள 3 குழந்தைகளில் ஒருவர் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருக்கிறார். இதற்காக ஊட்டச்சத்து நிறைந்த இலவச மதிய உணவு 8.3 கோடி குழந்தைகளுக்கு வழங்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

அவருடைய இந்த கனவுத் திட்டத்தை நிறைவேற்றும் விதமாக சோதனை அடிப்படையில் மேற்கு ஜாவாவில் இருக்கும் சுகவிலில் 190 சமையல் அறைகளில் 20க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு சுமார் 29 மில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ள நிலையில் இதன் மூலம் 90 மில்லியன் குழந்தைகள், கர்ப்பிணிகள் பயன் பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் இந்த திட்டத்தின் மூலம் 19 மில்லியன் பள்ளி மாணவர்கள் கர்ப்பிணிகளும் நேரடியாக பயன்பெறுவார்கள் என இந்தோனேஷியா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://news7tamil.live/mid-day-meal-scheme-introduced-in-indonesia-83-million-children-to-benefit.html