திங்கள், 1 டிசம்பர், 2025

ஆத்தூர் தொகுதியில் 22,000 வாக்காளர் பெயர்கள் நீக்கம்'... ஆட்சியர், தாசில்தார் மீது அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு

 periyasamy sir

ஆத்தூர் தொகுதியில் 22,000 வாக்காளர் பெயர்கள் நீக்கம்: ஆட்சியர், தாசில்தார் மீது அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி என்ற பெயரில் சுமார் 22,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியரின் தூண்டுதலே காரணம் எனவும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

திண்டுக்கல் தி.மு.க அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி இது குறித்துக் கூறியதாவது: ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சின்னாளப்பட்டி பேரூராட்சியில் எஸ்.ஐ.ஆர் (SIR) எனப்படும் வாக்காளர் சரிபார்ப்புப் பணிகள் நடைபெற்றன. இதில் திட்டமிட்ட சதி நடந்துள்ளது. சின்னாளப்பட்டியில் மட்டும் மொத்தம் 25,000 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 26 வாக்குச்சாவடிகளில் உள்ள 7,227 வாக்காளர்கள் 'இடம்பெயர்ந்துவிட்டதாக' (Shifted) குறிக்கப்பட்டு, அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

ஆத்தூர் முழுவதும் கணக்கிட்டால், மொத்தம் 21,800 வாக்காளர்களின் பெயர்கள் 'இடம் மாறுதல்' எனக் காரணத்தைக் காட்டி நீக்கப்பட்டு, அவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையின் பின்னணியில் ஆட்சியர் சரவணன் மற்றும் வட்டாட்சியர் முத்துமுருகன் ஆகியோர் உள்ளனர். வட்டாட்சியர் முத்துமுருகன் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் சென்று, அங்கிருந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் (BLO), எஸ்.ஐ.ஆர் படிவத்தை நிரப்பிக் கொண்டு வருபவர்களை 'இடம் மாறுதல்' என்று குறிப்பிடுங்கள் என்று கட்டாயப்படுத்தியுள்ளார். பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக இவ்வாறு அழுத்தம் தரப்பட்டுள்ளது.

சின்னாளப்பட்டி மக்கள் பெரும்பாலும் வியாபாரிகள். அவர்கள் பகல் நேரங்களில் பணிநிமித்தமாக வெளியூர் சென்றுவிட்டு இரவு நேரங்களிலே வீடு திரும்புவார்கள். இதனை அதிகாரிகள் கருத்தில் கொள்ளவில்லை. சரிபார்ப்புப் பணியை கடைசி நாள் வரை பொறுமையாகச் செய்திருக்க வேண்டும். ஆனால், அவசர அவசரமாகப் பணிகள் நிறுத்தப்பட்டதால், படிவம் நிரப்பிக் கொண்டு வந்த பலராலும் வாக்காளர் பட்டியலில் மீண்டும் சேர முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் சின்னாளப்பட்டியில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகின. ஆனால், தற்போது எஸ்.ஐ.ஆர் கணக்குப்படி 16,800 வாக்காளர்கள் மட்டுமே பட்டியலில் உள்ளனர் என்பது முரண்பாடாக உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்க்க ஆத்தூர் தொகுதியில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என அமைச்சர் ஐ.பெரியசாமி வலியுறுத்தி உள்ளார்.



source https://tamil.indianexpress.com/tamilnadu/22000-voters-removed-in-athoor-constituency-minister-i-periyasamy-alleges-official-conspiracy-10826881

இன்று மதியம் வலுவிழக்கும் டித்வா புயல்; சென்னை அருகே 30 கி.மீ தொலைவில்..! இந்திய வானிலை ஆய்வு மையம் அப்டேட்

 

இன்று மதியம் வலுவிழக்கும் டித்வா புயல்; சென்னை அருகே 30 கி.மீ தொலைவில்..! இந்திய வானிலை ஆய்வு மையம் அப்டேட் 01 12 2025



chennai rain d

இன்று மதியம் வலுவிழக்கும் டித்வா புயல்: இந்திய வானிலை ஆய்வு மையம் அப்டேட்

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ‘டித்வா’ புயல் கரையைக் கடக்காமல் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இப்புயல் சின்னம் வடதமிழகம் நோக்கி நகா்ந்து மேலும் வலுவிழக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்துக்கு பலத்த மழை அபாயம் நீங்கியது.

கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் வடக்கு திசையில் நகர்ந்த இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று (நவம்பர் 30, 2025) இரவு 11:30 மணியளவில் அதே பகுதியில் (12.3°N அட்சரேகை மற்றும் 80.6°E தீர்க்கரேகை) மையம் கொண்டிருந்தது. தற்போது வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையிலிருந்து இந்த அமைப்பின் மையப்பகுதி குறைந்தபட்சம் 50 கி.மீ தொலைவில் உள்ளது.

சென்னைக்கு தென்-தென்கிழக்கே சுமார் 90 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே 90 கி.மீ தொலைவிலும், கடலூருக்கு கிழக்கு-வடகிழக்கே 110 கி.மீ தொலைவிலும், காரைக்காலுக்கு வடக்கு-வடகிழக்கே 180 கி.மீ தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.

இந்த அமைப்பு வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரைக்கு இணையாக வடக்கு திசையில் நகரக்கூடும். இன்று (டிச.1) நண்பகலுக்குள் இது படிப்படியாக வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Depression) மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை வேளையில், இந்த அமைப்பு தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் கரையிலிருந்து 30 கி.மீ தொலைவிற்குள் மையம் கொண்டிருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/cyclone-ditwah-remnant-system-to-weaken-into-depression-by-noon-today-10826853