புதன், 11 பிப்ரவரி, 2026

தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல்: அரசு அதிகாரிகளை மாற்ற தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவு

 

ECI

சட்டமன்றத் தேர்தல்: 5 மாநில அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகளை உடனடியாக பணியிடமாற்றம் செய்ய தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, தேர்தல் ஆணையம் விதிமுறைகளை அறிவித்துள்ளது.

சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகள், கடந்த 4 ஆண்டுகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே மாவட்டத்தில் பணியாற்றியவர்கள் (அ) மே 31-ஆம் தேதிக்குள் 3 ஆண்டுகளை நிறைவு செய்பவர்கள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் மற்றும் அதற்குப் பிறகு நடைபெற்ற இடைத்தேர்தல் நடந்த தொகுதிகள்/மாவட்டங்களில் பணியாற்றிய மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், காவல் ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்களை மீண்டும் அதே இடங்களுக்கு பணியமர்த்தக் கூடாது. மருத்துவர்கள், பொறியாளர்கள் போன்ற தேர்தல் பணி சாராத அலுவலர்களுக்கும், மே 31-ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறவிருக்கும் அதிகாரிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தாது.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும் என்பதால், அதன்பிறகு பணியிட மாற்றங்களை மேற்கொள்ளும் முழு அதிகாரமும் தேர்தல் ஆணையத்திடம் சென்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/election-commission-orders-transfer-of-officials-in-5-poll-bound-states-ahead-of-assembly-elections-11094214