புதன், 11 பிப்ரவரி, 2026

70% இந்தியர்கள் பயன்படுத்தும் ஹெச்-1பி விசா ரத்தாகிறதா? அமெரிக்க எம்.பி.யின் அதிரடி மசோதா பின்னணி என்ன?

 

H-1B visas

70% இந்தியர்கள் பயன்படுத்தும் ஹெச்-1பி விசா ரத்தாகிறதா? அமெரிக்க எம்.பி.யின் அதிரடி மசோதா பின்னணி என்ன?

அமெரிக்காவில் உள்ள பெருநிறுவனங்கள், அமெரிக்கத் தொழிலாளர்களைக் குறைந்த ஊதியம் பெறும் வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கொண்டு மாற்றியதாகக் குற்றம்சாட்டி, குடியரசுக் கட்சி எம்.பி. ஒருவர் H-1B விசா திட்டத்தை முழுமையாக ரத்து செய்வதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

புளோரிடாவின் 17-வது காங்கிரஷனல் மாவட்டத்தின் அமெரிக்க பிரதிநிதி கிரெக் ஸ்டூப், 'எண்டிங் எக்ஸ்ப்ளோயிட்டேட்டிவ் இம்போர்ட்டட் லேபர் எக்ஸெம்ப்ஷன்ஸ்' என்ற மசோதாவை முன்மொழிந்துள்ளார். இந்தச் சட்டம் குடியுரிமை மற்றும் தேசியச் சட்டத்தைத் திருத்தி, ஹெச்-1பி விசா முறையை முற்றிலுமாக ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

ஹெச்-1பி விசா திட்டமானது கார்ப்பரேட் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து அமெரிக்கத் தொழிலாளர்களைப் பாதிக்கிறது என்று ஸ்டூப் வாதிட்டார். நமது தொழிலாளர்களும் இளைஞர்களும் ஹெச்-1பி விசா விசா திட்டத்தால் இடமாற்றம் செய்யப்பட்டு உரிமை இழக்கின்றனர். வேலை செய்யும் அமெரிக்கர்களுக்கு மீண்டும் முன்னுரிமை அளிப்பதற்காகவே EXILE சட்டத்தை அறிமுகப்படுத்துகிறேன் என்று கூறினார்.

ஹெச்-1பி விசா என்றால் என்ன?

ஹெச்-1பி விசா என்பது அமெரிக்க நிறுவனங்கள் சிறப்புத் தொழில்களில் வெளிநாட்டு நிபுணர்களைப் பணியமர்த்த அனுமதிக்கிறது. இது இந்திய தொழில்நுட்பம் மற்றும் சுகாதார நிபுணர்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.  ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களில் 80% அதிகமானோர் இந்திய அல்லது சீன நாட்டவர்கள். 2015 முதல், ஒவ்வொரு ஆண்டும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து H-1B மனுக்களில் 70% அதிகமானவை இந்தியர்களுடையது என்று அமெரிக்க அரசாங்கத் தரவு காட்டுகிறது. சீனா சுமார் 12-13% ஒப்புதல்களுடன் வெகுதூரம் பின்தங்கியுள்ளது.

இந்தியர்கள் இந்த விசா திட்டத்தில் பெரும் பங்கை வைத்திருப்பது, அமெரிக்கத் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் இந்திய நிபுணர்கள் அமெரிக்கர்களின் வேலைகளைப் பறிப்பதாகவும், ஊதியத்தைக் குறைப்பதாகவும் கூறும் MAGA குடியரசுக் கட்சியினரின் விமர்சனத்தை ஈர்த்துள்ளது. இந்த மசோதா அமெரிக்காவின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளுக்கு மத்தியில் வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹெச்-1பி விசா திட்டத்தின் முறைகேடுகளை தேசிய பாதுகாப்புக் கவலையாகக் குறிப்பிட்டு, கடந்த ஆண்டு புதிய ஹெச்-1பி விசாக்களுக்கு $100,000 கட்டணத்தை விதித்தார்.

டிச.15, 2025 முதல், அமெரிக்க வெளியுறவுத்துறை ஹெச்-1பி விசா மற்றும் ஹெச்-4 விசா விண்ணப்பதாரர்களைக் கடுமையான பின்னணிச் சோதனைக்கு உட்படுத்துகிறது. சமூக ஊடகச் செயல்பாடுகளின் மீதான ஆய்வுகள் காரணமாக, இந்தியா முழுவதும் விசா நேர்காணல்கள் தாமதமடைந்துள்ளன. இதனால், விசா முத்திரையிட இந்தியா சென்ற பல ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்கள் மாதக்கணக்கில் காத்திருக்கும் சூழலில் சிக்கியுள்ளனர்.


source https://tamil.indianexpress.com/international/new-exile-act-targets-h-1b-visas-why-us-lawmaker-wants-to-abolish-the-programme-used-by-70-of-indians-11094955