/indian-express-tamil/media/media_files/2026/02/07/coimbar-2026-02-07-21-50-32.jpg)
டார்ச் லைட், மெழுவர்த்தி ஏந்தி போராட்டம்; கோவையில் 5-வது நாளாக சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தங்கள் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்பும், போராட்டத்தைக் கைவிடாமல் இரவு முழுவதும் வட்டாட்சியர் அலுவலகத்திலேயே தங்கி போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
5-வது நாளான இன்று, ஊழியர்கள் அங்கேயே சமையல் செய்து உண்டு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். முன்னதாக 'ஒப்பாரி' வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இன்று மாலை மெழுகுவர்த்திகளை ஏந்தியும், செல்போன் டார்ச் லைட்டுகளை ஒளிர வைத்தும் கோரிக்கைகளை வலியுறுத்தி விண்ணதிர முழக்கங்களை எழுப்பினர். இன்றும் நேற்றையப் போலவே போராட்டக் களத்திலேயே படுத்து உறங்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2026/02/07/whatsapp-image-2026-02-07-21-55-31.jpeg)
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் முன்வைக்கும் பிரதான கோரிக்கை; சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு இளநிலை உதவியாளர் நிலையில் ரூ.16,500 மற்றும் அலுவலக உதவியாளர் நிலையில் ரூ.15,700 என்ற அடிப்படையில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அதில் 10 ஆண்டு பணி முடித்த தகுதியுள்ள பணியாளர்களுக்கு 50% முன்னுரிமை அளிக்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்குக் கோடை விடுமுறை அளிக்க வேண்டும். மகப்பேறு விடுப்பை 12 மாதங்களாக உயர்த்த வேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் தேசிய மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும். தங்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை போராட்டத்தைத் தொடரப் போவதாக ஊழியர்கள் உறுதியளித்துள்ளனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
source https://tamil.indianexpress.com/tamilnadu/lighting-up-the-night-coimbatore-noon-meal-workers-enter-5th-day-of-protest-with-candles-and-torches-11085979





