செவ்வாய், 10 பிப்ரவரி, 2026

அந்தமானில் அமைகிறது இந்தியாவின் முதல் 'அடுத்த தலைமுறை' கண்காணிப்பு மையம்

 

Andaman and Nicobar to get regional service centre

அந்தமானில் அமைகிறது இந்தியாவின் முதல் 'அடுத்த தலைமுறை' கண்காணிப்பு மையம்

இந்திய பெருங்கடல் பகுதியில் சுனாமி கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் பிராந்திய சேவை மையம் (Regional Service Centre - RSC) ஒன்றை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதைய சுனாமி எச்சரிக்கை அமைப்பு முக்கியமாக நிலநடுக்கங்களால் ஏற்படும் சுனாமிகளை மட்டுமே கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து ஐதராபாத்தில் உள்ள இந்திய கடல்சார் தகவல் சேவைகளுக்கான தேசிய மையத்தின் இயக்குனர் டி.எம். பாலகிருஷ்ணன் நாயர் கூறுகையில், நிலச்சரிவுகள், கடலுக்கடியில் ஏற்படும் எரிமலை வெடிப்புகள், சேற்றுச்சரிவுகள் போன்ற நிலநடுக்கம் அல்லாத காரணங்களால் ஏற்படும் சுனாமிகளையும் கண்டறியும் வகையில் 'அடுத்த தலைமுறை சுனாமி எச்சரிக்கை அமைப்பை' இந்தியா உருவாக்கி வருகிறது. உலக அளவில் 80% சுனாமிகள் நிலநடுக்கங்களால் ஏற்படுகின்றன. மீதமுள்ள 20% நிலச்சரிவு மற்றும் எரிமலை செயல்பாடுகளால் உருவாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நவீனமயமாக்கல் திட்டத்தின் முதல்கட்டமாக, அந்தமானின் ஸ்வராஜ் தீவில் உள்ள விஜய்நகர் பகுதியில் ரூ. 300 கோடி செலவில் இந்த RSC மையம் அமையவுள்ளது. இந்த மையம் இந்தியாவிற்கு மட்டுமின்றி, இலங்கை உள்ளிட்ட இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள அண்டை  நாடுகளுக்கும் சுனாமி தொடர்பான சேவைகளை வழங்கும். இத்திட்டத்தின் மிக முக்கியமான அம்சம், கடலுக்கடியில் 270 கி.மீ. நீளத்திற்கு 'சப்-சீ' (Sub-sea) கேபிள்களை அமைப்பதாகும். இவை 2 கண்டத்தட்டுகள் மோதும் 'சப்டக்ஷன் மண்டலத்தில்' (Subduction Zone) பதிக்கப்படும். தற்போது பயன்படுத்தப்படும் மிதவைகள் பெரும்பாலும் திருடப்படுவதாலோ அல்லது சேதமடைவதாலோ தரவுகளைப் பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. கடலுக்கடியிலான கேபிள்கள் இந்தத் தரவு இடைவெளியைச் சரிசெய்யும்.

இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதி, நிலநடுக்கம் அல்லாத காரணங்களால் (Non-seismic sources) ஏற்படும் சுனாமிகளால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மக்ரான் கடற்கரைப் பகுதியில் உள்ள பலவீனமான கடல் புவியியல் அமைப்பு மற்றும் கடலுக்கு அடியில் உள்ள சேற்று எரிமலைகளே இதற்கு முக்கியக் காரணமாகும்.

அந்தமான் கடல் பகுதியில் உள்ள பாரன் தீவுகளில் இந்தியாவின் ஒரே எரிமலை அமைந்துள்ளது. இது தற்போது செயலிழந்த நிலையில் இருந்தாலும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ஆபத்துகளைப் புறக்கணிக்க முடியாது. நிலநடுக்கமோ அல்லது எரிமலை வெடிப்போ அந்தமான் தீவுகளுக்கு மிக அருகில் ஏற்பட்டால், அந்தத் தீவு மக்களே முதலில் பாதிக்கப்படுவார்கள். இதனால்தான் அந்தமான் பகுதியில் இந்தியா அதிக முதலீடு செய்து வருவதாக (Regional Service Centre - RSC) இயக்குனர் தெரிவித்துள்ளார்.


source https://tamil.indianexpress.com/india/next-generation-system-to-strengthen-tsunami-monitoring-andaman-and-nicobar-to-get-regional-service-centre-11091559