திங்கள், 15 டிசம்பர், 2025

செல்லப் பிராணிகளை உரிமம் பெறாமல் வளர்த்தால் உரிமையாளருக்கு ரூ.5,000 அபராதம் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

 

சென்னையில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற டிசம்பர் 14-ம் தேதி கடைசி நாள் என்பதால், டிசம்பர் 15-ம் தேதி முதல் வீடு வீடாக ஆய்வு செய்து உரிமம் பெறாத செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களுக்கு ரூ,5000 வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. 

பெருநகர சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதை முறைப்படுத்த கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் முதல் பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளம் வாயிலாக செல்லப்பிராணி உரிமம் பெறும் முறை நடைமுறையில் உள்ளது.

செல்லப்பிராணிகளுக்கான உரிமம் பெறும் நடைமுறையை மேலும் விரைவுபடுத்தவும், செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் எளிதாக தங்கள் செல்லப்பிராணிகளுக்கான உரிமத்தை பெற்றுக் கொள்வதற்காகவும் மேம்படுத்தப்பட்ட இணையதள சேவை (ஆன்லைன் போர்டல்) சென்னை மேயரால் கடந்த அக்டோபர் 3-ம் தேதி தொடங்கப்பட்டது. இதன் மூலம் மக்கள் தங்கள் வீடுகளில் வளர்த்துவரும் நாய் மற்றும் பூனைகள் போன்ற செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற்று வருகின்றனர். 

சென்னை மாநகராட்சியில், 98,523 செல்லப்பிராணிகள் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் தற்போது வரை 56,378 செல்லப் பிராணிகளுக்கு மட்டுமே உரிமம் பெறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற காலக்கெடு டிசம்பர் 14-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

முன்னதாக, சென்னையில் உரிமம் பெறாமல் செல்லப்பிராணிகள் வளர்த்தால் ரூ. 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. டிசம்பர் 15-ம் தேதி முதல் வீடு வீடாக ஆய்வு செய்து அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-corporation-warns-that-pet-owners-will-be-fined-rs-5000-if-they-keep-pets-without-a-license-10910323