சனி, 13 டிசம்பர், 2025

மகளிர் உரிமைத் திட்டம்:

 

மகளிர் உரிமைத் திட்டம்:


MK Stalin 4

“மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், சத்திஸ்கர், ஒடிசா, புதுச்சேரி - அதுமட்டுமல்ல, தற்போது கர்நாடகா, ஜார்கண்ட், இமாச்சலப் பிரதேசம், மேற்குவங்கம், சிக்கிம் என பத்து மாநிலங்களில் உரிமைத் தொகை - மகளிர் மறுமலர்ச்சிக்கான திட்டமாக உயர்ந்து நிற்கிறது” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். Photograph: (Image Source: @Udhaystalin/X)

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தமிழ்நாட்டின் சாதனைப் பெண்களின் வெற்றிக் கொண்டாட்ட விழா சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை (12.12.2025) நடைபெற்றது. இந்த விழாவில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாவது கட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


13 12 2025 

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில்: “இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இரண்டு பேரை அழைத்திருந்தோம். ஒருவர் மரியாதைக்குரிய அம்மா கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்கள்; தன்னுடைய 100 வயதில் நிறைவாழ்க்கை வாழ்ந்து, பொது வாழ்க்கையில் வெற்றி பெற்றவர். மிகவும் பொருத்தமானவர்;

மற்றொருவர் இளம் வெற்றியாளர் சகோதரி துளசிமதி முருகேசன் அவர்கள். எவ்வளவு சிறப்பாக பேசினார்கள். விளையாட்டுத் துறையில் மட்டுமல்ல; அரசியல் துறைக்கும் வந்தாலும், இவர்கள் தான் நம்பர்-1-ஆக இருப்பார்கள். இந்த வயதில், அனைத்து சவால்களையும் வென்று, சாதனை செய்திருக்கிறார்; அவரும் மிகவும் பொருத்தமானவர். இவர்களை விட சிறப்பான விருந்தினர்கள் யாரும் இருக்கவே முடியாது.” என்று பேசினார்.

“வெல்லும் தமிழ்ப் பெண்கள்” விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “நாம் வாழும் சமூகம் – சாதி - மத – இன – மொழி – பாலின பாகுபாடு இல்லாமல், “எல்லாருக்கும் எல்லாம்” என்ற சமத்துவ சமுதாயமாக இயங்க வேண்டும் என்பதுதான் நம்முடைய இலட்சியம். அதனால்தான், 2021 மே 7-ஆம் நாள், தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் பொறுப்பேற்றவுடனே, “நம்முடைய அரசு, திராவிட மாடல் அரசு” என்று சொல்லி, ஏராளமான முன்னோடி திட்டங்களை செயல்படுத்தத் தொடங்கினேன்.

நம்முடைய இலட்சியப் பயணத்தில் மிகப்பெரிய முன்னெடுப்பாக, வரலாற்றை திருத்தி எழுதும் திட்டமாக அமைந்திருப்பதுதான் “கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்” இந்த திட்டத்தை அறிவிக்கும்போதே, தெளிவாக சொல்லிவிட்டோம் - இது உதவித்தொகை இல்லை; உரிமைத்தொகை. திட்டங்கள் என்பது, கொள்கைகளின் சிந்தனைகளின் செயல்வடிவம். ஒரு திட்டத்தின் வெற்றி என்பது, அதை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் மட்டுமல்ல; அந்தத் திட்டத்தை பொதுமக்கள் எந்தளவுக்கு சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு, தங்களின் வாழ்க்கைத்தரத்தை, சமூக நிலையை மேம்படுத்திக் கொள்கிறார்கள் என்பதில்தான், அந்த திட்டத்தின் உண்மையான வெற்றி இருக்கிறது. அந்த வகையில், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது.” என்று முதலமைச்சர் மு.க. ஸ்சாலின் கூறினார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பெரும்பாலும், மாநிலத்தில் இருக்கின்ற மகளிர் ”மாதம் ஆயிரம் ரூபாயை பெறுகிறார்கள்; விடியல் பயணத்தில், மாதந்தோறும் கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் மீதமாகிறது. புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களில் தங்களின் பிள்ளைகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கிடைப்பதால், அந்த வகையிலும் ஒவ்வொரு குடும்பத்திலும் பணப்புழக்கமும், சேமிப்பும் அதிகரித்திருக்கிறது.

இப்படி திராவிட மாடல் அரசின் முத்திரைத் திட்டங்களை முதலீடாக மாற்றி, தங்களின் பொருளாதார வலிமையை தமிழ்நாட்டுப் பெண்கள் உயர்த்திக்கொள்கிறார்கள். இதைதான், இந்தத் திட்டத்தின் வெற்றியாக நான் பார்க்கிறேன். இது நேரடியான பலன்கள் என்றால், கையில் காசு இருப்பதால் பெண்களுக்கு கூடும் சமூக மதிப்பு - அந்த பணத்தால், சத்தான காய்கறிகளை வாங்குவது – குழந்தைகளுக்கான கல்விக்கு செலவிடுவது என்று வாழ்க்கைத்தரம் உயரவும், மறைமுகமாகவும் இது உதவிக்கொண்டு இருக்கிறது” என்று கூறினார்.

“இங்கு பேசியதை எல்லோரும் கேட்டீர்கள் - கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் – நன்னிலம் மகளிர் நிலவுடைமைத் திட்டம் – விடியல் பயணம் – மக்களைத் தேடி மருத்துவம் – சுய உதவிக் குழுக்கள் – வெற்றி நிச்சயம் – நலம் காக்கும் ஸ்டாலின் - பெண் தொழில் முனைவோர் – விளையாட்டு – தோழி விடுதிகள் என்று நம்முடைய திராவிட மாடல் அரசின் எண்ணற்ற திட்டங்களால் பயனடைந்த “வெல்லும் தமிழ்ப் பெண்களாக” அவர்களின் வெற்றிக்கதைகளை சொல்லும்போது, திராவிட இயக்கத்தின் தொண்டனாக, எனக்கு அளவில்லாத பெருமை உண்டாகியிருக்கிறது” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் கூறினார்.

மேலும், “இந்த கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் வெற்றியின் உச்சம் என்ன தெரியுமா?” என்று கேட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அண்டை மாநிலங்கள்கூட இந்தத் திட்டத்தை தங்களுடைய மாநிலங்களில் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். இன்னும் சொல்கிறேன்… மக்கள்நலத் திட்டங்களை இலவசங்கள் என்று கொச்சைப்படுத்துகின்றவர்கள் கூட இந்த திட்டத்தை, அவர்கள் மாநிலத்தில் செயல்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.

மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், சத்திஸ்கர், ஒடிசா, புதுச்சேரி - அதுமட்டுமல்ல, தற்போது கர்நாடகா, ஜார்கண்ட், இமாச்சலப் பிரதேசம், மேற்குவங்கம், சிக்கிம் என பத்து மாநிலங்களில் உரிமைத் தொகை - மகளிர் மறுமலர்ச்சிக்கான திட்டமாக உயர்ந்து நிற்கிறது! இதையெல்லாம் நான் மேடை அலங்காரத்திற்காக, பெருமைக்காக சொல்கிறேன் என்று யாரும் கருதவேண்டாம். நாம் கொண்டு வந்து செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தால், சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்து, பொருளாதார அறிஞர்கள் ஆய்வு செய்து, அறிக்கையாகவே வெளியிட்டிருக்கிறார்கள்.” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

“பத்தாண்டுகள் பாழ்படுத்தப்பட்ட தமிழ்நாட்டின் வளர்ச்சியை மீட்டெடுத்து, வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு – இந்தியாவிலேயே எந்த மாநிலமும் சாதிக்காத அளவுக்கு பொருளாதாரம் வளர்ச்சி அடையும். 16 விழுக்காடு ஜி.எஸ்.டி.பி பொருளாதார வளர்ச்சியை நம்முடைய திராவிட மாடல் அரசு சாத்தியப்படுத்தியிருக்கிறது. இந்த வளர்ச்சியில் மகளிருக்கான பங்கு நிச்சயம் கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன்.

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் இதுவரைக்கும் - ஒரு கோடியே 13 இலட்சத்து 75 ஆயிரத்து 492 சகோதரிகளுக்கு மாதா மாதம் ஆயிரம் ரூபாய் என்று இதுவரைக்கும் 28 ஆயிரம் ரூபாய் வழங்கியிருக்கிறோம். எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று சொன்னேன். அதற்காக, மக்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலமாக, விடுபட்ட மகளிரும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்து இன்றைக்கு காலையில், 16 இலட்சத்து 94 ஆயிரத்து 339 பேருக்கு அக்கவுண்ட்டில் ஆயிரம் ரூபாய் போட்டுவிட்டோம்! இனிமேல், தமிழ்நாட்டில் இருக்கும்

ஒரு கோடியே 30 இலட்சத்து 69 ஆயிரத்து 831 சகோதரிகளுக்கு ஆயிரம் ரூபாய் மாதா மாதம் தொடர்ந்து கிடைக்கும்.

தலைநிமிரும் தமிழ்நாட்டில், பெண்கள் உயர்ந்து நடைபோட, நிச்சயம் உரிமைத்தொகையும் உயரும். பெண்களின் உரிமையும் உயரும், உறுதியாக சொல்கிறேன்… எதிர்காலத்தில் வரலாற்று ஆசிரியர்கள் வரலாற்றை எழுதும்போது, “மகளிர் முன்னேற்றத்தின் புதிய அத்தியாயத்தை ஸ்டாலினுடைய திராவிட மாடல் ஆட்சியில் தொடங்கியது” என்றுதான் எழுதுவார்கள். இந்த உரிமைத்தொகை உங்களின் உயர்வுக்கு மட்டுமல்ல – உங்கள் மகள்களின் – மகன்களின் கல்விக்குப் பயன்பட வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

மேலும், “கல்விதான் சிறந்த முதலீடு! யாராலும் அழிக்க முடியாத சொத்து! தலைமுறைகள் தழைக்க பெண்கள் முன்னேற்றமும், அதற்கு பெண் கல்வியும் அவசியம்! நீங்கள் முன்னேறி வந்து, சிறகடித்து பறக்க வேண்டும்! ஆணும், பெண்ணும் சரிநிகர் என்று சாதனைகள் படைக்க வேண்டும்! அதற்கு, உங்கள் சகோதரனாக - உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றைக்கும் இருப்பேன்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி கூறினார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/vellum-tamil-pengal-cm-mk-stalin-speech-kalaignar-makaglir-urimai-thittam-extension-10906040