/indian-express-tamil/media/media_files/2026/06/16/ancient-sea-silk-2026-06-16-13-04-02.jpg)
பேரரசர்கள் மட்டுமே அணிந்த 'கடல் தங்க பட்டு'... மறுஉருவாக்கம் செய்து கொரிய விஞ்ஞானிகள் சாதனை!
கடலின் தங்க இழை என்று அழைக்கப்படும் சீ சில்க் (Sea silk - கடல் பட்டு), பல நூற்றாண்டுகளாக பல்வேறு கதைகளுடனும் புராணங்களுடனும் தொடர்புடைய ஒன்றாக இருந்துவருகிறது. கடல்கன்னிகளால் நெய்யப்பட்ட நூல் என்றும் கதைகள் கூறப்படுவதுண்டு. கடந்த நூற்றாண்டுகளில் பேரரசர்கள், போப்பாண்டவர்கள், சமூகத்தின் மிக உயர்ந்த அந்தஸ்தில் இருந்தவர்கள், தங்களின் செல்வம் அதிகாரத்தின் அடையாளமாக இந்த கடல் பட்டால் நெய்யப்பட்ட ஆடைகளை அணிந்து வந்தனர்.
உண்மையில், இந்த கடல் பட்டு என்பது 'பின்னா நோபிலிஸ்' (Pinna nobilis) எனப்படும் ஒருவகை கடற்சிப்பிகள், தங்களை கடலடித் தளத்தோடு இறுக்கமாகப் பிணைத்துக் கொள்வதற்காக சுரக்கும் 'பிசஸ்' (Byssus) எனப்படும் மெல்லிய இழை போன்ற திரவத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. மத்திய தரைக் கடல் (Mediterranean) கடலோரப் பகுதிகளில் வாழ்ந்த கைவினைஞர்கள், இந்த இழைகளைச் சேகரித்து, பதப்படுத்தி, மெல்லிய பளபளப்பான தங்க நிற நூலாக மாற்றி ஆடைகளை நெய்து வந்தனர். ஆனால், இந்த 'பின்னா நோபிலிஸ்' சிப்பிகள் தற்போது அழியும் ஆபத்தில் உள்ள ஒரு உயிரினமாக மாறிவிட்டதால், கடந்த சில நூற்றாண்டுகளாக இந்த கடல் பட்டு தயாரிப்பு முறை முற்றிலும் வழக்கற்றுப் போனது.
கொரிய விஞ்ஞானிகளின் புதிய சாதனை
தற்போது, போஸ்டெக் பல்கலை. பேராசிரியர் டாங் சூ ஹ்வாங், பேராசிரியர் ஜிமின் சோய் தலைமையிலான கொரிய ஆராய்ச்சியாளர்கள் குழு, பாரம்பரிய கடல் பட்டின்நிறம் மற்றும் அமைப்பை ஒத்த ஒரு புதிய இழையை வெற்றிகரமாக மறுஉருவாக்கம் செய்துள்ளது. இதற்காக அவர்கள் அழியும் நிலையிலுள்ள 'பின்னா நோபிலிஸ்' சிப்பிகளைப் பயன்படுத்தாமல், அதற்குப் பதிலாக அதன் குடும்பத்தைச் சேர்ந்த, கொரியக் கடற்கரைகளில் உணவுக்காக அதிகளவில் வளர்க்கப்படும் 'அட்ரினா பெக்டினாட்டா' (Atrina pectinata) என்ற சிப்பிகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
இதுவரை கொரிய கடலோரப் பகுதிகளில் வெறும் கடல் கழிவாகக் கருதப்பட்டுவந்த இந்த சிப்பிகளின் இழைகள், இயற்பியல், வேதியியல் ரீதியாக மத்தியதரைக் கடல் சிப்பிகளின் இழைகளைப் போன்றே இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். பின்னர் அதனைப் பதப்படுத்தி, பாரம்பரிய கடல் பட்டைப் போலவே இருக்கும் தங்க நிற இழையாக மாற்றியுள்ளனர். இந்த 'அட்ரினா பெக்டினாட்டா' சிப்பிகள், நேர்த்தியான தங்க நிற ஆடைகள் மற்றும் இயற்கையான நிறமிகளை (Bioinspired pigments) உருவாக்குவதற்கான ஒரு சிறந்த மற்றும் நிலையான ஆதாரமாக விளங்கும் என்று 'அட்வான்ஸ்டு மெட்டீரியல்ஸ்' (Advanced Materials) என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் பட்டுக்கு தங்க நிறம் வருவது எப்படி?
கடல் பட்டை மறுஉருவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள், இந்த கடல் பட்டுக்கு எப்படி இந்த தங்க நிறப் பளபளப்பு கிடைக்கிறது? என்ற நீண்ட நாள் கேள்விக்கான விடையையும் கண்டறிந்துள்ளனர். இந்த நிறத்திற்கு எந்தவொரு பிரத்யேக சாயமோ? தாவரச் சாறோ காரணம் அல்ல; மாறாக அந்த நூலின் கட்டமைப்பிலேயே இதற்கான ரகசியம் ஒளிந்துள்ளது. இந்த நூலில் 'போட்டோனின்' (Photonin) எனப்படும் நுண்ணிய, வட்ட வடிவ புரதக் கட்டமைப்புகள் ஒளியுடன் வினைபுரியும் போது, ஒளிரும் தன்மையை (Iridescent) ஏற்படுத்துகின்றன. இந்நிகழ்வு அறிவியல் ரீதியாக 'அமைப்பு வண்ணமயமாக்கல்' என்றழைக்கப்படுகிறது. சோப்பு குமிழிகள் மற்றும் வண்ணத்துப்பூச்சிகளின் சிறகுகள் ஒளியைப் பிரதிபலிப்பதைப் போன்றதே இந்த ஒளியியல் தொழில்நுட்பமும் ஆகும்.
இந்த தங்க நிறம் பல நூற்றாண்டுகள், ஏன் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆனாலும் மங்காது. அமைப்பு ரீதியாக வண்ணமயமாக்கப்பட்ட துணிகள் இயல்பாகவே நிறம் மங்குவதை எதிர்க்கும் தன்மை கொண்டவை. எங்களது இந்தத் தொழில்நுட்பம், எந்தவொரு சாயங்களோ அல்லது உலோகங்களோ பயன்படுத்தாமல் நீண்ட காலம் நீடிக்கும் நிறத்தை வழங்குகிறது என்று இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியர் பேராசிரியர் டாங் சூ ஹ்வாங் தெரிவித்துள்ளார்.
மறுஉருவாக்கத்தின் அவசியம் என்ன?
அதிகரித்து வரும் கடல் மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு காரணமாக, கடல் பட்டின் அசல் ஆதாரமான 'பின்னா நோபிலிஸ்' சிப்பிகள் முற்றிலும் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதனால் ஐரோப்பிய ஒன்றியம் இந்த சிப்பிகளில் இருந்து பட்டு அறுவடை செய்வதற்கு கடுமையான தடை விதித்துள்ளது. மேலும், இந்த பட்டைச் சேகரித்து, நூலாக நூற்கும் கலை தெரிந்த மிகச் சில கைவினைஞர்கள் மட்டுமே இன்று உலகளவில் உயிரோடு இருக்கிறார்கள்.
இந்தச் சூழலில், கொரிய விஞ்ஞானிகளின் இந்த ஆராய்ச்சி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தால், கடலில் வீணாகும் கழிவுகளைக் கொண்டு, மிக உயர்ந்த கலாச்சார மற்றும் வரலாற்று மதிப்புமிக்க ஒரு நிலையான பொருளை உருவாக்க முடியும். இது சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய புதிய ஆடை வடிவமைப்பு (Sustainable fashion) மற்றும் மேம்பட்ட பொருள் தொழில்நுட்பத் துறைக்கு (Advanced materials) புதிய கதவுகளைத் திறந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
source https://tamil.indianexpress.com/science/korean-scientists-recreate-ancient-sea-silk-and-crack-the-secret-of-its-shimmer-scientists-replicate-legendry-dye-free-sea-silk-12043627





