அமெரிக்கா - ஈரான் போர் நிறைவு: ஜூன் 19-ல் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வந்த போர் சூழல் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தத்தை ஈரான் தேசிய பாதுகாப்பு ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, உலக நாடுகளின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜூன் 19ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் இரு நாடுகளுக்கும் இடையே அதிகாரப்பூர்வமாக அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். லெபனான் மீதான தாக்குதல்கள் உட்பட அனைத்து விதமான ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத்' சமூக வலைதளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, உலக வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) எந்தவிதக் கட்டணமும் இன்றி சர்வதேச கப்பல் போக்குவரத்திற்காகத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். பல மாதங்களாக நீடித்து வந்த பதற்றமான போர் சூழல் இந்த அமைதி ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது உலக நாடுகளிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
14 06 2026





